பிரிட்டனில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மீண்டும் நான்கு வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.வரும் 5ம் தேதி முதல் அமலாகும் இந்த ஊரடங்கு, டிச., 2 வரை அமலில் இருக்கும்.
அதேநேரத்தில் வேலை, கல்வி மற்றும் உடற்பயிற்சி தவிர வேறு எதற்காகவும், மக்கள் வீட்டை விட்டு வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், பல்கலைகழகங்கள் திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில், அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. பார்சல் மட்டுமே வாங்கி செல்லலாம். பப், ரெஸ்டாரண்ட்கள், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கூடங்கள் , அத்தியாவசிய பொருட்கள் அல்லாத கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். ஊரடங்கு காரணமாக வேலையிழப்பால் பாதிக்கப்படும் மக்களுக்கு, சம்பளத்தில் 80 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகளவில் பரவ துவங்கியுள்ளது. நேற்று மட்டும், 22 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 10 லட்சத்தை கடந்துள்ளது. 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு, முன்னர் கணிக்கப்பட்டதை விட கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், டிசம்பர் மாதத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என நிபுணர்கள், விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து, நேற்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.