இலங்கைக்கு கடத்திய ரூ.3 கோடி மஞ்சள், போதைப்பொருள்

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா, போதைப்பொருள் மற்றும் மஞ்சள் மூட்டைகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சமீபகாலமாக கடத்தல் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 20 மற்றும் 31ம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மன்னார் வளைகுடா கடலில் புத்தளம் மற்றும் மன்னார் வங்காள கடலோர பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது கடல் வழியாக படகில் கடத்தி வரப்பட்டு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக 16 பேரை கைது செய்தனர். 2 படகு, ஒரு லாரி, டூவீலரையும் பறிமுதல் செய்தனர். இதுபோல் பாக் ஜலசந்தி கடலில் தலைமன்னார், வல்வெட்டித்துறை, காரைநகர் கடலோர பகுதிகளில் ரோந்து சென்றபோது 98 கிலோ கஞ்சா பார்சல்களையும், 950 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளையும் கைப்பற்றினர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து, ஒரு படகு மற்றும் ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர். 2 நாளில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சமையல் மஞ்சளின் இலங்கை மதிப்பு ₹3 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. இது குறித்து மத்திய, மாநில புலனாய்வுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

* நாட்டு படகுடன் சிக்கிய 2 டன் மஞ்சள்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கரைப்பகுதியை நோக்கி வந்த நாட்டுப்படகை நோக்கி போலீசார் சென்றனர். உடனே படகை கரையில் நிறுத்தி விட்டு கும்பல் தப்பியது. தார்ப்பாயினால் மூடியிருந்த படகை சோதனையிட்டதில் 2 டன் எடையுள்ள 73 மஞ்சள் மூட்டைகள் இருந்தன. வழியில் இயந்திரம் பழுதானதால் கடத்தல்காரர்கள் படகை கரைக்கு கொண்டு வந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மஞ்சள் மூட்டைகளையும் நாட்டுப் படகையும் மண்டபம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த படகு தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தது என்று கூறப்படுவதால், ராமேஸ்வரம் கியூ பிரிவு போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here