பெண் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஓராண்டில் 2000-த்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய தத்தெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய தத்தெடுப்பு ஆணையத்தின் தகவலின்படி, கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 2020ம் ஆண்டு மார்ச் 31 வரையில் மொத்தம், 1,470 ஆண் குழந்தைகளும், 2,061 பெண் குழந்தைகளும் தத்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்தாண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச் வரையில் 0-5 வயதுக்குட்பட்ட 3,120 குழந்தைகளும், 5 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 411 குழந்தைகளும் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

நாட்டிற்கு உள்ளேயே 3,110 குழந்தைகளும், நாடுகளுக்கு இடையே 421 குழந்தைகளும் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அதிகபட்சமாக, 615 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக, கர்நாடகாவில் 272, தமிழகத்தில் 271, உத்தரப் பிரதேசத்தில் 261, ஒடிசாவில் 251 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர். 2018-2019ம் ஆண்டில் மொத்தம் 3,745 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். இதனுடன் ஒப்பிடுகையில், 2019-2020ம் ஆண்டு குழந்தைகள் தத்தெடுப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொதுவாக கலாச்சாரத்தின் அடிப்படையிலும், தலைமுறையை அடிப்படையாக கொண்டும் பெரும்பாலானோர் ஆண் குழந்தைகளை தான் விரும்புவார்கள். ஆனால், தற்போது மக்களின் மனநிலை மாறி வருகிறது. பலர் விருப்பப்பட்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்கின்றனர். குழந்தையை தத்தெடுக்க அனுமதிக்கும் போது நாங்கள் அவர்களுக்கு மூன்று விருப்ப தேர்வுகளை வழங்குகிறோம். ஒன்று ஆண் குழந்தை, பெண் குழந்தை அல்லது  எந்த முன்னுரிமையும் கொடுக்க முடியாது. ஆனால், அதிகமானவர்கள் பெண் குழந்தைகளை தான் தேர்வு செய்கிறார்கள். இதனால், பெண் குழந்தைகள் அதிகளவில் தத்தெடுக்கப்படுகின்றனர்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here