கோலாலம்பூர்: மாரடைப்பால் பாதிக்கப்பட்டு ரவூப்பில் திங்கள்கிழமை (நவம்பர் 16) காலமான முன்னாள் ஜெரிக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹஸ்புல்லா ஒஸ்மானை (வயது 63) கெளரவிப்பதற்காக மக்களவையில் ஒரு நிமிடம் மெளனம் அனுசரிக்கப்பட்டது.
நாடாமன்றத்தில் ஹஸ்புல்லாவின் பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் மக்களவை சபாநாயகர் டத்தோ ஶ்ரீ அசார் அஜீசன் ஹருன் தெரிவித்தார்.
அவர் நாடாளுமன்ற விவகாரங்களில் தீவிரமாக இருந்தார் மற்றும் மே 2,2013 முதல் ஜெரிக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் ஒரு பொது கணக்குக் குழு (பிஏசி) உறுப்பினராகவும் நிலையான ஆணைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
செவ்வாயன்று (நவம்பர் 17) நாடாளுமன்றத்தில் தனது இரங்கல் உரையின் போது, ”அவரது பங்களிப்புகள் மற்றும் தியாகங்கள் அனைத்தும் நாட்டிற்கு மிகப் பெரியவை, அர்த்தமுள்ளவை” என்று அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டு 14 வது பொதுத் தேர்தலில் பிஏஎஸ்ஸின் முகமட் தஹலான் இஸ்மாயில் மற்றும் பி.கே.ஆரின் இப்ராஹிம் முகமட் ஹனாபியா ஆகியோரை விட 5,528 பெரும்பான்மையுடன் ஹஸ்புல்லா வெற்றி பெற்றார்.