2027 சீ விளையாட்டுப் போட்டியில் கூடுதல் விளையாட்டுகள்!

சிப்பாங், 

அடுத்த ஆண்டு மலேசியாவில் நடைபெறவுள்ள 34ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் (சீ விளையாட்டு) கூடுதல் விளையாட்டுகளைச் சேர்ப்பது தொடர்பில் பங்கேற்கும் நாடுகளின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க மலேசியா தயாராக இருப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இருப்பினும், கூடுதல் விளையாட்டுகளைச் சேர்ப்பது தொடர்பான இறுதி முடிவைத் தென்கிழக்காசிய விளையாட்டுச் சம்மேளனமே (SEAGF) எடுக்கும் என்று அவர் கூறினார்.

“கூடுதல் விளையாட்டுகளைச் சேர்ப்பதற்கான கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். அதற்கு நாம் தடையாக இருக்கக்கூடாது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் சில குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பினால், அதனை நாம் ஊக்குவிக்க வேண்டும்,” என்றார் அவர்.

எனினும், அனைத்து விண்ணப்பங்களும் முறையாகப் பரிசீலிக்கப்படுவதோடு, தென்கிழக்காசிய விளையாட்டுச் சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டே முடிவுகள் எடுக்கப்படும் என்று அன்வார் விளக்கமளித்தார்.

சிப்பாங் அனைத்துலகப் பந்தயத் திடலில் இன்று நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான விளையாட்டு தினத் தொடக்க விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமட் தௌபிக் ஜொஹாரி, அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here