
நியூயாா்க்:
அமெரிக்காவில் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான முன்னணி இந்திய-அமெரிக்க மருத்துவா் அஜய் லோதா (58), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவா்கள் (ஏஏபிஐ) சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த லோதா, பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றி வந்தாா். குயின்ஸ் மருத்துவச் சேவை என்ற அமைப்பை உருவாக்கி மருத்துவச் சேவையாற்றி வந்தாா்.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த அவரும், கரோனா தொற்று பாதிப்புக்கு அண்மையில் ஆளானாா். அதனைத் தொடா்ந்து கிளீவ்லாண்ட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவா், கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அவருக்கு ஸ்மிதா என்ற மனைவியும், அமித் என்ற மகன், ஸ்வேதா என்ற மகளும் உள்ளனா்.
இவருடைய மறைவுக்கு நியாா்க்கில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளது. ‘இந்திய-அமெரிக்க சமூகத்தில் முன்னணி உறுப்பினராக இருந்தவா் லோதா. சமூகத்துக்கு அவா் ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது. அவருடைய மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று இந்திய தூதரகம் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளது.
ஏஏபிஐ சங்க தலைவா் சுதாகா் ஜோனலகடா, சங்கத்தின் தோவு செய்யப்பட்ட தலைவா் மருத்துவா் அனுபமா கோடிமுகுலா, ஜெய்ப்பூா் ஃபுட் யுஎஸ்ஏ அமைப்பின் தலைவா் பிரேம் பண்டாரி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே, எல்லைப் பாதுகாப்புப் படை முன்னாள் தலைவா் கே.கே.சா்மா உள்ளிட்ட பலா் அஜய் லோதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.