இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சம்பவத்துடன் ஜொகூர் கார்ப்பரேஷன் (JCorp) நிறுவனத்தைத் தொடர்புபடுத்தி வெளியாகியுள்ள தகவல்களைத் தாம் கடுமையாகக் கருதுவதாக ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநில அரசாங்கத்திற்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனமான ஜோகூர் கார்ப்பரேஷன், இந்தோனேசிய காட்டுத் தீ சம்பவத்தில் தொடர்புடையது போன்ற தவறான தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உண்மைகளைத் திரித்துக் கூறுவதை எந்தத் தரப்பினரும் மேற்கொள்ளக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பாக ஜோகூர் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அந்நிறுவனமோ அதன் குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களோ மலேசியாவிற்கு வெளியே எந்தவொரு தோட்டத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அவற்றின் செயல்பாடுகளையும் நிர்வகிக்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, கூலிம் (மலேசியா) பெர்ஹாட் நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் வாயிலாக இந்தோனேசியாவில் உள்ள ஐந்து தோட்ட நிறுவனங்களில் கொண்டிருந்த முதலீட்டுப் பங்குகளை கடந்த 2007ஆம் ஆண்டிலேயே விற்றுவிட்டதாக அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் உள்ள மேலும் இரண்டு நிறுவனங்களில் கூலிம் கொண்டிருந்த அனைத்து பங்குரிமைகளும் 2023ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி முழுமையாக விற்கப்பட்டுவிட்டதாகவும் அவர் விளக்கினார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தற்போதைய உரிமை அல்லது செயல்பாட்டுu நிர்வாகத்துடனும், அங்கு ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவத்துடனும் ஜோகூர் கார்ப்பரேஷனைத் தொடர்புபடுத்தி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை மட்டுமின்றி, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடியவை என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்துவதற்கு அனைத்துத் தரப்பினருக்கும் உரிமை உள்ளது. இருப்பினும், அவை உண்மையான தகவல்கள் மற்றும் உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் ஜோகூர் மாநிலத்தின் நம்பகத்தன்மைக்கும் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படுவதை மாநில அரசாங்கம் அனுமதிக்காது. மாநிலத்தின் நேர்மை, நம்பகத்தன்மை மற்றும் நற்பெயரைத் தொடர்ந்து பாதுகாப்பதில் ஜொகூர் அரசாங்கம் உறுதியாக இருக்கும் என்று மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.
கோகி கருணாநிதி














