கவுதமாலா நாட்டில் கிறிஸ்துமஸ் எப்படி தொடங்குகிறது தெரியுமா ?

டிசம்பர் மாதம் தொடங்கினாலே உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கிவிடும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை பொறுத்தவரை, பல்வேறு நாடுகளிலும், அந்த நாடுகளின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் ஆகியற்றுக்கு ஏற்ப கொண்டாட்டம் மாறுபடும்.
ஏசு பிரானின் பிறப்பைக் கொண்டாடும் வகையில், கிறிஸ்துமஸ் நாளில் ஏழை எளியவர்களுக்குப் புத்தாடைகள், பரிசு பெட்டிகளைக் கொடுத்தும் கிறிஸ்தவ மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். மக்களை மகிழ்விக்க கிறிஸ்மஸ் தாத்தா வேடம் பூண்டு, பரிசு பெட்டிகளை கொடுத்து மகிழ்வார்கள்.

ஆனால், மத்திய அமெரிக்க நாடான, கவுதமாலா நாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் வித்தியாசமான பழக்க வழக்கங்களுடன் தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் தொடக்கத்தை அறிவிக்கும் விதமாக, அந்த நாட்டில் தீ சடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

தீய சக்திகளை அழிப்பது என்கிற ஒருவித சடங்குடன் கிறிஸ்துமஸ் தொடங்குகின்றனர். அந்த நாட்டு மக்கள். அதற்காக கொடூர உருவங்களைச் செய்து அவற்றைத் தீயில் எரித்து கொண்டாட்டத்தைத் தொடங்குகின்றனர்.

சுமார் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த சடங்குடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை அந்த நாடு கொண்டாடுகிறது. அப்படி கொளுத்துவதன்மூலம் தங்கள் பிடித்துள்ள கெட்ட சகுனங்கள் விலகும் என்ற நம்பிக்கையை அந்த மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு புது ஆடைகள், பொருட்கள் வாங்குவதுபோல, ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு ஏற்ப இந்த பொம்மைகளையும் வாங்கி கொளுத்துகின்றனர். இந்த கொடூர உருவங்களை விற்பனை செய்வதற்கு என்றே புதிய புதிய கடைகள் முளைக்கின்றனவாம்.

நம் நாட்டில் தசரா விழாவையொட்டி, ராமலீலா, சூரசம்காரம் போன்ற நிகழ்ச்சிகளைப் போல, அந்த நாட்டில் இந்த தீ சடங்கு கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஊரிலும் மக்கள் கூட்டாக சேர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். சிலர் சிறிய அளவிலான பொம்மைகளை வீடுகளில் கொளுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். நகரங்களில் சில இளைஞர்கள் சேர்ந்து கூட்டாக இது போன்ற நிகழ்வுகளை நடத்துகின்றனர்.

இந்த கொண்டாட்டத்திற்கு பிறகுதான், இயேசு பிறக்கிறார் என்பது அந்த மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிகழ்வை ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் மக்கள் பார்க்கிறார்கள் என அந்த நாட்டினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இப்படி எரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்றும், அவற்றை நிறுத்த வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாட்டிலும் தீமையை அழிப்பதில், வெவ்வேறு விதமான சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதுதான் முக்கியமான அம்சம். அதாவது நன்மை பிறப்பதற்கு முன், தீமைகள் அழிக்கப்படுகிறது என்பதே இந்த திருவிழாவின் நோக்கம் என கவுதமாலா மக்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here