வாஷிங்டன்-
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3- ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர்
தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துவரும் தற்போதைய அதிபர் டிரம்ப் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம்சுமத்தி வருகிறார். இதனால், அமெரிக்க அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
டிரம்ப் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் போதும் அமெரிக்க ஆட்சி அதிகாரத்தை ஜோ பிடனுக்கு மாற்றம் செய்யும் நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆட்சி மாற்ற பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் (தலைமை சட்ட அதிகாரி) வில்லியம் பெர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் தனது பதவியில் இருந்து விலகுவார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்பின் விசுவாசியாக கருத்தப்பட்ட அட்டர்னி ஜெனரல் வில்லியம் பெர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தலில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என கூறினார். இதனால், டிரம்பிற்கும் வில்லியமிற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. தற்போது வில்லியம் தனது பதவியை ராஜினாமா செய்வார் என டிரம்ப் அறிவித்துள்ள நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.
அட்டர்னி ஜெனரல் பதவியில் இருந்து விலகுவது ஜோ பிடனின் வெற்றியையும், அதிபர் டிரம்ப் ஆட்சி முடிவுக்கு வருவதையும் கிட்டத்தட்ட உறுதிபடுத்தும் நிகழ்வாகவே கருதப்படுகிறது.