வளசரவாக்கத்தில் கடைகளில் பொருட்கள் வாங்குவது போல நடித்து 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களை மாற்ற முயன்ற நபரை போலீசார் அதிரடியாகக் கைதுசெய்தனர்.
கடந்த சில நாட்களாக வளசரவாக்கம் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு சென்ற மர்மநபர் ஒருவர், அங்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பொருட்கள் வாங்கிகொண்டு, சில்லறை பெற்றுச் சென்றுள்ளார். பின்னர் கடை உரிமையாளர்கள் பார்த்தபோது, அவர் அளித்துச்சென்றது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதேபோல் அந்த நபர் பல்வேறு கடைகளிலும் கள்ளநோட்டுகளை மாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பல கடை உரிமையாளர்களிடம் இருந்து கார்கள் வந்ததால், வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு சென்று கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில், மர்மநபரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் சந்தேகத்திற்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த நபரிடம் கள்ளநோட்டுகளும், அதனை மாற்றிய மீதி பணமும் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
அதில் பிடிபட்ட நபர் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இலியாஸ்(35) என்பதும், போதிய வருமானம் இல்லாததால் யூடியூப் சேனல் பார்த்து பிரத்யேக ஜெராக்ஸ் மெஷினை வாங்கி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கடைகளில் மாற்றி வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து இலியாசிடமிருந்து 2 கள்ளநோட்டுகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அவரது வீட்டில் பதுக்கிவைத்த கள்ளநோட்டுகள், ஜெராக்ஸ் மிஷினையும் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.