தீப்பெட்டி தர மறுத்ததால் இளைஞர்கள் வெறிச்செயல்!

தீப்பெட்டி தர மறுத்த தொழிலாளி ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவில் அருகே அரங்கேறியுள்ளது.

நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சந்திரன் (58). இவர் குடும்பத் தகராறால் வீட்டுக்குச் செல்லாமல், கிடைத்த வேலையைச் செய்து வந்ததோடு, ஏதாவது ஒரு வீட்டின் வாசலில் படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு வீட்டின் வாசலில் உறங்கிக் கொண்டிருந்த சந்திரன், மறுநாள் காலை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்த போது, சந்திரன் ஓர் இடத்தில் படுத்திருந்ததும் அவருக்கு அருகே 5 பேர் கொண்ட கும்பல் வந்து செல்வதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சிசிடிசி காட்சியில் இருந்த பாலாஜி , இலங்கேஸ்வரன், லட்சுமணன், பொன்ராஜ்,  ஒரு சிறுவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 5 பேரும் 22 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் கைதானவர்கள் தீப்பெட்டி கேட்டதும் சந்திரன் கொடுக்க மறுத்ததால் அவரை அங்கேயே எரித்துக் கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, கைதான 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

தீப்பெட்டி கொடுக்க மறுத்த அப்பாவி தொழிலாளி, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here