கொரோனா வைரஸை வீழ்த்திய நியூசிலாந்து

கடந்த பிப்ரவரி 11- ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு, புதிய நுண் கிருமியின் பெயரை கோவிட் 19 (கரோனா) என அறிவித்தது. கடந்த பிப்ரவரி 28- ஆம் தேதி நியூசிலாந்தின் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது விமான நிலையங்களில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.

இத்தாலி, தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதால் அந்த நாடுகளில் இருந்து நியூசிலாந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அரசின் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் தேவையான அளவு அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்து கொண்டனர்.

கடந்த மார்ச் 13- ஆம் தேதி நியூசிலாந்தில் நடக்கவிருந்த திருவிழா (பசிபிகா திருவிழா) முதல்முறையாக ரத்து செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் மக்கள் யாருமற்ற மைதானத்தில் டெஸ்ட் போட்டியை ஆடினர். இந்தத் தொடரின் மற்ற ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. நியூசிலாந்தில் 6ஆவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் நியூசிலாந்து வரும் அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கடந்த மார்ச் 14- ஆம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது.

கடந்த மார்ச் 16-ஆம் தேதி நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடேர்ன் முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அரசு உத்தரவை மீறி தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாத பயணிகள், நாடு கடத்தப்படுவார்கள் என்று அவர் அதிரடியாக அறிவித்தார். கடந்த மார்ச் 17- ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் ஜெசிந்தா, ரூ.91,343 கோடி பொருளாதார மீட்பு உதவித் தொகையை அறிவித்தார். இது நாட்டின் நாட்டின் மொத்த உற்பத்தி அளவில் 4 சதவீதம் ஆகும். இதில் சுகாதாரத் துறை, தொழில் துறை, வேலையிழந்தோருக்கு பெரும் தொகை ஒதுக்கப்பட்டது.

கடந்த மார்ச் 19-ம் தேதி நியூசிலாந்தின் மொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. அப்போது 100 பேருக்கும் அதிகமாக மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்தது. மேலும் வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வீட்டிலிருந்தே பணி செய்ய வேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் ஜெசிந்தா நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதை நாட்டு மக்கள் அனைவரும் கண்டிப்புடன் பின்பற்றினர். கடந்த மார்ச் 25 – ஆம் தேதி நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

கடந்த மார்ச் 29- ஆம் தேதி கரோனா வைரஸால் நியூசிலாந்தில் முதல் மரணம் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டன. கடந்த ஏப்ரல் 5- ஆம் தேதி, நியூசிலாந்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்தது. அப்போது அனைத்து வணிகங்களுக்கும் ஊதிய மானியத்தை அரசு அறிவித்தது.

ஜூன் 8- ஆம் தேதி நியூசிலாந்தில் கொரோனா தொற்று அறவே இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து 100 நாட்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகத் திரும்பியது. ஆரம்பம் முதலே புத்திசாலித்தனம், முன்னெச்சரிக்கையுடன் பிரதமர் ஜெசிந்தா செயல்பட்டதால் கொரோனா வைரஸ் சவாலை நியூசிலாந்து எளிதாக சமாளித்து வெற்றி கொண்டது.

கடந்த ஆகஸ்டில் ஆக்லாந்து நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவியது. அப்போதும் அரசு துரிதமாக செயல்பட்டு வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த மே மாதம் முதல் நியூசிலாந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. தற்போதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம், சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here