வாஷிங்டன்-
கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
கொரோனா நோய் பரவலால் அமெரிக்காவிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். நோயினால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர்.
பலர் சிகிச்சைக்காக அதிகப் பணம் செலவிடப்பட வேண்டியிருந்தது. அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.66 லட்சம் கோடி பணத்தை நிவாரணமாக வழங்க அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்துக்கு பாராளுமன்ற அவை , செனட் சபை ஆகியவை ஒப்புதல் அளித்தன. இறுதியாக ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால்தான் சட்டம் அமலுக்கு வரும்.
ஆனால், அதிபர் டிரம்ப் இந்த சட்டத்தில் கையெழுத்து போட மறுத்தார். கொரோனா நிவாரணம் போதுமானதாக இல்லை என்று கூறி கையெழுத்து போடாமல் இழுத்தடித்து வந்தார்.
இதனால் அமெரிக்காவில் குழப்பமான நிலை ஏற்பட்டது. அடுத்ததாகப் பதவி ஏற்க உள்ள ஜோ பிடனும் டிரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். பல சட்ட நிபுணர்களும் டிரம்பின் நடவடிக்கைகளைக் கண்டித்தனர்.
இதையடுத்து டிரம்ப் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலமாக அமெரிக்க மக்களுக்கு பெருமளவு நிவாரணங்கள் கிடைக்கும்.
இதன் மூலம் ஒரு நபருக்கு ரூ.4½ லட்சம் வரை நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது.









