இந்த நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அண்மையில் அறிவித்தது.
தங்களது தடுப்பூசி குறித்து அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பாஸ்கல் சொரியட் கூறுகையில் “இந்த தடுப்பூசி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பைசர், மாடர்னா தடுப்பூசிகளைப் போலவே திறம்பட செயல்படுவதாகவும், 95 சதவீதம் நோயாளிகளை பாதுகாப்பதாகவும், ஆஸ்பத்திரி சிகிச்சை தேவைப்படும் கடுமையான நோய்களை தடுப்பதில் 100 சதவீதம் பயனுள்ளதாகவும் இருக்கும்” என கூறினார்.
எனவே புத்தாண்டுக்கு முன்பாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளிக்கும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்தலாம் என இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த பரிந்துரையை ஏற்று ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இங்கிலாந்தில் ஏற்கனவே பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டில் இருக்கும் நிலையில், 2- ஆவது தடுப்பூசிக்கு அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து வருகிற 4-ஆம்தேதி முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கான ஒப்புதல் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒரு மாற்று சக்தியாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஏனெனில் பைசர் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும். மேலும் ஒரு டோசுக்கு 15 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) வரை செலவாகும். ஆனால் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை சாதாரண குளிர்சாதன பெட்டியிலும் சேமித்து வைக்கலாம். மேலும் ஒரு டோசுக்கு 2 பவுண்டுகள் (சுமார் ரூ.200) வரை மட்டுமே செலவாகும்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவின் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சீரம் மருந்து நிறுவனம் தயாரித்து வருவதும் இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு மையம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.