டில்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தை பரப்ப அகாடமி அமைக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இதற்காக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதல்வரும் கலை கலாசார மொழித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்ப டில்லியில் தமிழ் அகாடமி அமைக்கப்படும்.
இதன் தலைவராக டில்லி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர், முன்னாள் கவுன்சிலர் என். ராஜா நியமிக்கப்படுகிறார். தமிழ் அகாடமிக்கான இடம், அலுவலகம் ஆகியவை விரைவில் உருவாக்கப்படும். இந்த அகாடமி மூலம், தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு விருதுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
டில்லி அரசின் இந்த முயற்சிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டும் நன்றியும் தெரிவித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியத் தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாடமி நிறுவியிருக்கும் டெல்லி அரசைப் பாராட்டுகிறேன். முதல்வர் கெஜ்ரிவால், துணைமுதல்வர் மணீஷ்சிசோடியா இருவருக்கும் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன். தலைநகரில் பறக்கும் தமிழ்க் கொடிக்குத் தலைவணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.