புதுடெல்லி-
காதலின் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழும் தாஜ்மகாலைக் காண கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தாஜ்மகாலை காணச் சென்ற 4 இளைஞர்கள் திடீரென காவிக்கொடிகளை கையில் ஏந்தியபடி வீடியோ எடுத்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இதனால், தாஜ்மகாலில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்குச் சென்று, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘காவிக்கொடிகளுடன் வாலிபர்கள் நுழைந்தது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரித்து 2 அல்லது 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்’ என்று தெரிவித்தனர்.