ஆன்லைன் வர்த்தகத்தில் அசுர வளர்ச்சி கண்ட ஜாக் மா நிலைமை என்ன ?

பீஜிங்-
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில், சீனாவை சேர்ந்த அலிபாபா குழுமமும் ஒன்று. அதன் நிறுவனர் ஜாக் மா. சீன அரசை விமர்சித்த காரணத்தால், அவர் திடீரென மாயமாகி விட்டார். இந்த அதிர்ச்சி செய்திகள் வெளியாகி ஒரு வாரத்துக்கும் மேலாகி விட்டது. ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்பதற்கான உறுதியான தகவல்கள் இன்னும் எதுவும் கிடைக்கவில்லை.
உண்மையில் என்னதான் நடக்கிறது சீனாவில்? ஜாக் மா எங்கே இருக்கிறார்? சாதாரண பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர் ஜாக் மா. அலிபாபாவை தொடங்கிய பிறகு கடந்த 20 ஆண்டுகளில் அவர் கண்டது நிஜமாகவே அசுர வளர்ச்சி. 

அவரது சொத்து மதிப்பு இன்றைய தேதிக்கு நான்கரை லட்சம் கோடி என்று சொல்லி மலைக்கிறார்கள். பிரமாண்டமான சாம்ராஜ்யத்தை சமகாலத்தில் கண்முன்னே உருவாக்கியதால் சீன மக்களும், சர்வதேச தொழில் முனைவோர்களும் ஜாக் மாவை சூப்பர் ஹீரோவாகவே பார்க்கிறார்கள். எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தபோது சீன அரசை அவர் விமர்சனம் செய்ததில் ஆரம்பித்தது சிக்கல். அப்படி அவர் என்னதான் கூறி விட்டார்.

* ‘சீன அரசின் பொருளாதார நடவடிக்கைகளைப் பழமைவாதப் போக்கு,’ என்று அவர் கிண்டலடித்தார்.
* ‘சீன வங்கிகள் வட்டிக்கடைகள் போல பொதுமக்களிடம் நடந்து கொள்கின்றன,’ என்று குற்றம் சாட்டினார்.
* ‘கடன் பெற்று தொழில் செய்வது சீனாவில் சாத்தியமில்லை,’ என்று கொந்தளித்தார்.
– இவைதான், அதிபர் ஜி ஜின்பிங்கின் அரசை விமர்சித்து. ஜாக் மா கூறிய விமர்சனங்கள்.
– இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னுடைய நிறுவனம் மூலம் வங்கிகளைப் போல பொதுமக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தையும் அவர் செய்து வந்தார்.

இதனால், அரசுக்கு வரவேண்டிய வருமானம் பாதிக்கிறது என்று சீன அரசு வெளிப்படையாகவே எச்சரித்தது. இந்த மோதலின் எதிரொலியாக அலிபாபா குழுமத்தின் ஆண்ட் நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்துக்குத் தடை விதித்தது சீன அரசு. ஏகாதிபத்திய நடவடிக்கைகளால் சிறு நிறுவனங்களை நசுக்குவதாக விசாரணை கமிஷனும் திடீரென அமைக்கப்பட்டது. விசாரணைக்கு ஏதுவாக, கிறிஸ்துமசுக்கு முந்தைய தினத்தில் சீனாவில் இருக்குமாறு ஜாக் மாவுக்கு சீன அரசு அறிவுறுத்தியது. ஆனால், இவை எல்லாமே கூறப்படும், சொல்லப்படும், நம்பப்படும் தகவல்கள்தான். சீன அரசை விமர்சிக்கும் சாதாரண மனிதர்கள் முதல் பிரபலங்கள் வரை, திடீரென காணாமல் போவது என்பது சீனாவில் மிகவும் அற்ப விஷயம்.

பிரபல விஞ்ஞானிகள், மருத்துவர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என சீன அரசை எதிர்த்த பலர், இதற்கு காணாமல் போயுள்ளனர். இவர்களில் சிலர், பல மாதங்களுக்குப் பிறகு வெளியுலகுக்கு வந்ததும் உண்டு. பலர் வெளியே வராமல் போனதும் உண்டு. சீனாவில் நடக்கும் ‘மாயங்களுக்கு’ சமீபத்திய உதாரணம், வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக முதன் முதலில் வெளியுலகுக்கு தகவல் கூறியவர்கள்தான். இந்த ரகசியத்தை வெளியே சொன்ன மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பலரது நிலைமையை கடந்த ஆண்டில் கேள்விப்பட்டோம்.

இதில் மிகப்பெரிய பில்லியனரான ஜாக் மாவும் சிக்கிக் கொண்டாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த குழப்பங்களுக்கு இடையில் சீன கம்யூனிச கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான பீப்புள்ஸ் டெய்லியில், ‘அரசின் சிறப்பு கவனிப்பில் ஜாக் மா இருப்பதாக’ செய்தி வெளியிட்டு அவசரமாக அந்த தகவலை நீக்கியது.

8  ஆம் அதிபதியால் உயிருக்கு ஆபத்து
சீனாவில் ஜோதிட நம்பிக்கை அதிகம். அப்படிப்பட்ட நம்பிக்கை உள்ள பலர், ‘ஜாக் மாவுக்கு எட்டாம் அதிபதி திசை நடப்பதால் உயிருக்கே ஆபத்து,’ என்று சைக்கிள் கேப்பில் ஆருடம் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here