உளவு பார்க்க முயற்சி? லடாக்கில் அத்துமீறி ஊடுருவிய சீன வீரர்: கைது செய்து ராணுவம் விசாரணை

புதுடெல்லி-

இந்திய எல்லைக்குட்பட்ட கிழக்கு லடாக் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய சீன வீரரை, இந்திய ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இந்தியாவின் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த மே மாதம் அத்துமீறி நுழைந்தனர். அப்போது நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்திய வீரர்களின் தாக்குதலில் சீன வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், சீனா அதை மறைத்து விட்டது. இந்த மோதல் தற்போது வரை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண, இந்தியா–சீனா ராணுவ உயரதிகாரிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. லடாக்கில் இரு நாடுகளும் படைகள், ஆயுதங்கள், பீரங்கிகளைக் குவித்து வருகின்றன.  

இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு லடாக்கின் சுசூல் பகுதியில் உள்ள குருங் மலைப் பகுதி வழியாக அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரரை இந்திய ராணுவத்தினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர் இப்பகுதியில் உளவு பார்க்க வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ராணுவ தரப்பில், ‘கடந்த 8 ஆம் தேதி அதிகாலை, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் கிழக்கு பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன வீரர், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது.

2வது ஊடுருவல்
லடாக் எல்லையில் இந்திய – சீன படைகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், இந்திய பகுதிளுக்குள் சீன வீரர்கள் ஊடுருவி உளவு பார்ப்பது அதிகமாகி இருக்கிறது. கடந்தாண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக்கில் உள்ள  டெம்சோக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன வீரர் வாங் யா லாங், ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, 2 நாட்களுக்கு பிறகு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here