1000 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் புதைந்த கோயில்..? பூர்வஜென்ம ஞாபகத்தால் மீட்க வந்த மன்னர்..

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி ஆற்றுப் பகுதிக்கு வந்த இளைஞர் ஒருவர், தான் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மன்னராக இருந்ததாகவும், அப்போது கட்டிய கோயில் தற்போது மண்ணில் புதைந்துவிட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அத்துடன் அவர் நிற்கவில்லை.. அந்த கோவிலை மீட்க வேண்டும் என்றும், தன்னுடன் கூட்டி வந்த ஆட்களை கொண்டு அப்பகுதியில் குழி தோண்டினார். பின்னர் உள்ளூர் மக்கள் அப்பகுதி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர் உடனடியாக அங்கு வந்து, சம்மந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினார்.

அதில் அவர் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன்(37) என்பது தெரியவந்தது. தான்  ஓர் ஆட்டோ டிரைவர் என்றும், தனக்கு திடீரென பூர்வ ஜென்ம ஞாபகம் வந்ததாகவும் கண்ணன் கூறினார். மேலும் இந்த கொங்கராயக்குறிச்சியை தான் ஆட்சி செய்ததாகவும், தான் கட்டிய கோயில் மண்ணில் புதைந்துவிட்டதால், அதனை மீட்கவே குழி தோண்டச்  சொன்னதாகவும் தாசில்தாரிடம் கூறியுள்ளார் கண்ணன்.

ஆனால், மத்திய அரசு முறைப்படி அனுமதி வழங்கினால் மட்டுமே குழி தோண்ட அனுமதிக்கப்படும் எனவும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கூறியதால், கண்ணன் குழி தோண்டும் பணியை நிறுத்திவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” 1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கிறேன்.. அப்போது என் பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் என் மனைவி பெயர் சுந்தரி.. என்னுடைய காலத்தில் தான் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழன் என் நண்பர் தான். அவர் கட்டியதைப் போலவே இந்த நாட்டிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று எண்ணி கோயில் கட்டினேன்.

நான் தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்திற்கு என் மனைவியுடன் புறப்பட்டபோது, என்னை ஒருதலையாக காதலித்த அரண்மனை பணிப்பெண் எங்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டார்.. எனக்கு பிறகு இந்த கோயிலை யாரும் பராமரிக்கவில்லை. அதனால் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கு பூர்வஜென்ம நினைவு வந்தது. அதனால் தான் இந்த இடத்திற்கு வந்து பார்த்தேன்.. அப்போது கோயில் மண்ணுக்குள் புதைந்தது தெரியவந்தது.. ஆனால் மண்ணுக்குள் கோயில் இருப்பது உண்மை” என்று தெரிவித்தார்.

எனினும் அவர் கூறுவது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.. அவர் கூறுவது எதுவும் நம்பும்படியாக இல்லை என்றாலும், இதுகுறித்து ஆய்வு செய்த பிறகே அவர் கூறியது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here