6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி,திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஜனவரி 15 முதல் 31- ஆம் தேதிக்குள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். கடந்த 2016- இல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், 2017- ஆம் ஆண்டு தடை நீக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கரோனா பரவல்காரணமாக மக்கள் அதிக அளவில்கூடும் நிகழ்வுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஜல்லிக்கட்டு நடத்தவும் தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது மேலும் 6 மாவட்டங்களில் ஜன.15 முதல் 31- ஆம் தேதிக்குள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்கீழ், ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா ஆகியவற்றை ஜன.15- ஆம் தேதி முதல் 31- ஆம் தேதிக்குள் பின்வரும் பகுதிகளில் நடத்த ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியகாளையம் புத்தூர், உலகம்பட்டி, ஏ.வெள்ளோடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிபட்டினம், அலசீபம், செம்படமுத்தூர், குப்பச்சிப்பாறை, தேனி மாவட்டத்தில் பல்லவராயன்பட்டி, திருப்பூர் மாவட்டத்தில் அழகுமலை, புதுக்கோட்டையில் விராலிமலை அம்மன்குளம், சிவகங்கையில் சிறாவயல், கண்டிபட்டி, குன்றக்குடி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here