கீழக்கோயில்பட்டியில் பாரம்பரிய வழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கும் சிறுவீட்டு பொங்கல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள கீழக்கோவில்பட்டியில் சிறுவீட்டு பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தை மூன்றாம் நாளில் சிறுவீட்டு பொங்கல் விழா நடத்துகின்றனர். நேற்று அனைத்து வீடுகளின் முன்பும் சிறுபானைகளில் பொங்கல் வைத்தனர். இதை வீட்டில் உள்ள வளர்இளம் பெண்கள்தான் வைக்க வேண்டும் என்பது வழக்கம். வீட்டில் உள்ள மூத்தவர்கள் அருகில் இருந்து அடுப்பை பற்ற வைப்பது முதல் பொங்கல் வைப்பது வரை ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

பொங்கல் பானையுடன், மார்கழி மாதம் வீட்டின் முன்பு கோலமிட்டு, பூ வைத்த சாணத்தில் எருவாட்டி தயாரித்துள்ளதையும் எடுத்துக்கொண்டு கீழக்கோயில்பட்டியில் உள்ள பகவதியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு பொங்கல் பானைகளை வைத்து பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர்.

தொடர்ந்து கோயிலில் அம்மன் வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து மருதாநதி ஆற்றுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு எடுத்துச்சென்ற பூ எருவாட்டியில் தீபம் ஏற்றி ஆற்றுநீரில் விட்டு வழிபட்டனர்.

இந்த பாரம்பரிய திருவிழா குறித்து கீழக்கோயில்பட்டியை சேர்ந்த பேபி கூறுகையில், அடுத்த தலைமுறை பெண்களுக்கு பொங்கலின் முக்கியத்துவம், பொங்கல் வைக்கும் முறை ஆகியவை குறித்து கற்றுத்தர இந்த சிறுவீட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நம் முன்னோர்கள் காட்டிய வழியை எங்கள் கிராம மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

ஊர் மக்கள் நலம்பெறவும், விவசாயம் செழிக்கவும் சிறுவீட்டு பொங்கல் நிகழ்ச்சியில் வழிபாடு நடத்தப்படுகிறது. வளர்இளம்பெண்களுக்கு நமது பாரம்பரியத்தை எடுத்துக்கூறி பொங்கல் விழாவை நிறைவு செய்கிறோம். வரும் தலைமுறைகளிலும் இந்த நடைமுறை யை தொடரச்செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம், என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here