மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரேகாவ் பாங்குர் நகரில் லட்சுமி பார்க் வளாகத்தில் ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இங்குள்ள திறந்தவெளி மைதானத்தில் பாகுபலியில் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் என்ற சினிமா படப்பிடிப்புக்காக செட் அமைக்கப்பட்டு இருந்தது.
இதில் நேற்று காலை அங்கு படப்பிடிப்பு நடந்தது. பின்னர் மாலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் 4 மணியளவில் செட்டில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து அங்கு இருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இந்நிலையில் தீ மள மளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. மேலும் அப்பகுதியே புகை மண்டலமானது.

அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறினார். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓம் பிரகாஷ் இயக்கும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ், சயீப் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். ஆனால் அவர்கள் விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இல்லை என கூறப்படுகிறது. ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.