குமரியில் கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காற்று பலமாக வீசி வருகிறது. கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று அதிகாலை முதலே சூறைக்காற்று வீசி வருவதால் அலைகள் 10 முதல் 15 அடி உயரம் வரை எழுந்து கரையில் உள்ள பாறைகளில் ஆக்ரோஷமாக மோதியது. கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவத்துறை, சிலுவைநகர், புதுகிராமம், மணக்குடி, கீழ மணக்குடி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் வள்ளம் மற்றும் கட்டுமரங்கள் கரைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கன்னியாகுமரி பகுதியில் மீன்கள் வரத்து இல்லை. இதனால் மீன் சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. படகில் பயணம் செய்ய காலை 6.30 மணியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து துறையில் காத்திருந்தனர்.
காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கடல் சீற்றம் காரணமாக கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும், கடலில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரி திருவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.