சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று காலை சென்னை திரும்பி வந்து கொண்டுள்ளார். பெங்களூருவில் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் இருந்து காரில் புறப்பட்டார். அமைச்சர்களின் புகாரால் போலீசார் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தமிழகத்தில் நுழையும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து, சசிகலா வாகனத்தை தொடர்ந்து 5 வாகனங்கள் மட்டுமே பின் தொடர வேண்டும்.
இதர வாகனங்கள் வழியிலேயே நிறுத்தப்படும் என கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் விதிகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், சசிகலா பின்னால் வந்த வாகனங்களைப் போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசாருடன் அவரது ஆதரவார்கள் கடும் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். அதாவது, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் நோட்டீஸ் வழங்கினர். இதனை அவர் கையெழுத்து பெற்றுக்கொண்டார்.