பிரதமர் சென்னை வருகை: பாதுகாப்பு குறித்து காவல் ஆணையர் ஆலோசனை

பிரதமர் வருகையையொட்டி செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-  ஆம் தேதி சென்னை வர உள்ளார். மெட்ரோ ரயில் விரிவாக்கம், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அண்மையில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த முதல்வர் பழனிசாமி தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருப்பதால், பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் போலீஸ் அதிகாரிகளுடன் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கூடுதல் காவல் ஆணையர்கள் ஆர்.தினகரன் (தெற்கு), ஏ.அருண் (வடக்கு), தேன் மொழி (மத்திய குற்றப்பிரிவு), அமல்ராஜ் (தலைமையிடம்), கண்ணன் (போக்குவரத்து) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் பகுதியை சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுமா என்றும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் சசிகலாவின் சென்னை வருகை தொடர்பாகவும், அதைத் தொடர்ந்து அவரின் அடுத்தடுத்த அரசியல் நகர்வால் சட்டம் ஒழுங்கில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதா எனவும் காவல் ஆணையர் ஆலோசித்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here