அமைச்சர்கள் என்ன மகான்களா?

இந்தத் தனிமைப்படுத்தும் விவகாரமே வேண்டாமே ! ஏன் இந்த வேண்டாத வேலை. நானும் இருக்கிறேன், நானும் வேலை செய்கிறேன் என்ற பெயரில்,தேவையில்லாத மற்றும்ம் அறிவுக்கெட்டாத அறிக்கைகளை வெளியிட்டு, தானும் குழம்பி,  மக்களையும் குழப்ப வேண்டிய அவசியம்தான் என்ன?

சுகாதார அமைச்சர் டத்தோசெரி டாக்டர் அடாம்  பாபா ஒரு பரிந்துரரையை முன் வைத்திருக்கிறார். அதாவது பணி நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பும் அமைச்சர்கள்  3 தினங்களுக்கு மட்டும் தனிமைப்படுத்தப்பட்டால் போதும் என்கிறார்.

இவரின் இந்தப்பரிந்துரையை பார்த்து, கேட்டு சிரிப்பதா, அழுவதா  என்று தெரியவில்லை. அமைச்சர்கள் மகான்கள், மக்கள்  மாபாவிகளா? என்ன ஓர் அறிவுக்கூர்மை மிக்க பரிந்துரை இது. மெய்சிலிர்க்கிறது.

சாமானியர்கள், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், பிரமுகர்கள் வெளிநாடு சென்று திரும்பினால் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்செரி நூர் இஷாம் அப்துல்லா  கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி அறிவித்தார்.

இதே போல் சபாவில் இருந்து திரும்பும் நபர்கள் கையில் கண்டிப்பாக வளையம் அணிந்து 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று 2020 , நவம்பர் 20 ஆம் தேதி நூர் இஷாம் அறிவித்திருந்தார்.

இதற்கு 4 தினங்களுக்குப்பின் (2020, நவம்பர் 24 ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்ட அடாம், சபாவிலிருந்து திரும்புகின்றவர்கள்  கோவிட் 19 சோதனை செய்துகொண்டால் மட்டும் போதும்  என்றார்.

ஏன் இத்தனை முரண்பாடு? மக்களையும் நாட்டையும் குழப்புவதில்  அமைச்சருக்கு அப்படி என்ன அலாதியான மகிழ்ச்சி?

தான் ஓர் அமைச்சர், எல்லா அதிகாரமும் தமக்குத்தான் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக இத்தனை ஆர்ப்பரிப்பா?

இந்த ஆசை இருந்தால் வேறு எங்காவது போய்காட்டுங்களேன் . யார் இதைவேண்டாம் என்றது?  அதிகாரத்தைக் காட்டுவதற்கு  மக்கள் உயிரோடு விளையாட வேண்டாமே.

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் பதவி ஏற்ற காலத்தில் இருந்து டாக்டர் நூர் இஷாம்தான் கோவிட்- 19 பற்றிய அன்றாட நிலவரங்களையும் ஆகக்கடைசியான மேம்பாடுகளையும்  அதிகாரப்பூர்வமாக ஒவ்வொரு நாளும் அறிவித்து வருகிறார்.

சுகாதார அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்வி அவ்வப்போது எழுந்தாலும்  மக்கள் அதனை சீரியஸாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தும் பயனில்லை என்பதுதான் மக்களின் முடிவாக இருந்தது.

இக்கொடிய தொற்றுக்கிருமி மனித உயிர்களைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கின்ற இந்த இக்கட்டான  காலகட்டத்தில் இவ்வாறான இரட்டைப் போக்கை அரசாங்கம், குறிப்பாக அமைச்சர் கையாளைக்கூடாது .

பேசாமல் யாருமே தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று பொதுவில் அறிவித்துவிடலாமே?

கோவிட் -19 உயிர்க்கொல்லி தொற்றுக்கிருமி பரவதலுக்கான் காரணத்தின் ஆணிவேரைக் கண்டுபிடித்து அடியோடு பிடுங்கி எறிவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் முழுக்கவனத்தையும்  அமைச்சர் செலுத்த வேண்டும்.

பத்து நாள்  தனிமை  என்பதற்கு மருத்துவ ரீதியில் ஒரு காரணம் இருக்கிறது. தொற்று பவுவதற்கான காலகட்டம்தான் இது என் ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

உலகளவில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அது, அமைச்சருக்குத் தெரியாமல் போனதுதான் விந்தையாக இருக்கிறது.

அறியல் மற்றும் மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமே ஒழிய சுய விருப்பங்களை, மேதாவித் தனங்களை இங்கு காட்டக்கூடாது.

பத்து நாள் கட்டாயத்தனிமை என்பதை உலக சுகாதார நிறுவனமும் (WHO) காலக்கெடுவை வரையறுத்திருக்கிறது என்பதையும் சுட்டிகாட்ட வேண்டியிருக்கிறது.

மக்கள் உயிர் மகத்தானது. வீண் விளையாட்டுகள் வேண்டாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here