கோலாலம்பூர்: நாட்டில் அதிகரித்து வந்த கோவிட்-19 சம்பவங்களினால் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கோவிட் தொற்றினால் வர்த்தகர்கள் நஷ்டத்தை எதிர்நோக்கி வந்த வேளையில் அரசாங்கத்தின் அறிவிப்பு மேலும் குறிப்பாக உணவகங்களுக்கு பெரும் பாதிப்பாக இருந்தது என்று மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் (பிரெஸ்மா) தலைவர் டத்தோ ஹாஜி ஜவ்ஹர் அலி தய்யுப்கான் (அலி மாஜு) தெரிவித்தார்.
கோவிட் தொற்று தொடங்கிய காலம் தொட்டு உணவகங்களில் 60 முதல் 80 விழுக்காடு வரை வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. உணவக உரிமையாளர்கள் கடை வாடகை மற்றும் ஊழியர்களின் ஊதியம் ஆகியவற்றை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.
நாங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து பலமுறை அரசாங்கத்திடம் முறையிட்டு இருந்தோம். எங்களின் சிரமத்தை புரிந்து கொண்ட அரசாங்கம் தற்பொழுது உணவகங்களில் ஒரு மேசையில் இரண்டு பேர் அமர்ந்து உணவருந்தலாம் என்ற அறிவிப்பு எங்களுக்கு பெருமூச்சையை வரவழைத்து இருக்கிறது.
எங்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அரசாங்கம் வழங்கியிருக்கும் அனுமதிக்காக பிரெஸ்மா சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோ அலி மாஜு தெரிவித்துக் கொண்டார்.
கூடிய விரைவில் கோவிட் தொற்று கட்டுக்குள் வந்து அனைத்து வர்த்தகங்களும் பழைய நிலையை அடைய வேண்டும் என்பதே நம்முடைய அவா என்கிறார் டத்தோ அலிமாஜு