மருத்துவக்கல்லூரி பேராசிரியரின் மனிதநேயம்
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுமார் 330 கி.மீ.க்கு தொலைவில் உள்ளது பர்லா நகரம். இங்கு ஏழை நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த குறையை போக்குவதற்காக சங்கர் ராம்சந்தானி என்ற மருத்துவர் வாடகை வீடு ஒன்றில் ஆஸ்பத்திரி ஒன்றை கடந்த 12- ஆம்தேதி திறந்துள்ளார்.
இங்கு சிகிச்சை பெறுவதற்கு ரூ.1 மட்டுமே அவர் கட்டணமாக வசூலிக்கிறார். இதனால் இது ‘ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி’ என்றே அழைக்கப்படுகிறது. மருத்துவக்கல்லூரி ஒன்றில் துணை பேராசிரியராக பணியாற்றி வரும் சங்கர், தனது மனைவியும், பல் மருத்துவருமான சிகாவுடன் இணைந்து இந்த மனிதநேய செயலில் ஈடுபட்டு உள்ளார்.
காலை, மாலை வேளைகளில் தலா 1 மணி நேரம் திறந்திருக்கும் இந்த ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கணிசமான எண்ணிக்கையில் வரத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக ஆஸ்பத்திரி திறந்த முதல்நாளே 33 பேர் வந்து ஒரு ரூபாயில் பயன்பெற்றுத் திரும்பினர்.
இது குறித்து டாக்டர் சங்கர் கூறுகையில், ‘மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில்தான் துணை பேராசிரியராக பதவி உயர்வு பெற்றேன். துணை பேராசிரியர்கள் பணி நேரத்தை தவிர பிற நேரங்களில் தனியாக ஆஸ்பத்திரி நடத்த முடியும்.
நோயாளிகள் தாங்கள் இலவசமாக மருத்துவம் பெறுவதாக உணரக்கூடாது என்பதற்காகவே ஒரு ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
டாக்டரின் இந்த சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.