கோத்த கினபாலு,
சபா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட மின்சாரத் தடையால், கடந்த திங்கட்கிழமை முதல் எஸ்பிஎம் தேர்வு எழுதி வரும் 42,808 மாணவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மின்சாரத் தடை மற்றும் குறிப்பாக சூக் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும் எஸ்பிஎம் தேர்வு இதுவரை சுமுகமாக நடைபெற்று வருவதாக சபா மாநிலக் கல்வித் துறை இயக்குநர் அபிடின் மர்ஜான் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு நாளைக்குள் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என நம்புகிறோம். அவ்வாறு இல்லாவிட்டாலும் தேர்வு சுமுகமாக நடைபெறுவதற்கான மாற்று ஏற்பாடுகளை நாங்கள் ஏற்கெனவே செய்துள்ளோம்.
மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றி அமைதியான சூழலில் தேர்வு எழுதுவதை உறுதி செய்வதே எங்களின் முக்கிய நோக்கமாகும்,” என்று நேற்று இரவு பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு சபாவில் எஸ்பிஎம் தேர்வுக்காக 324 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தேர்வு நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய 13,291 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணியாளர்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளுடன் இணைந்து அவசரகால நடவடிக்கைகளையும் மாநிலக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.
வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள ‘Ops Payung’, புகைமூட்டப் பிரச்சினைக்கு ‘Ops Topeng’, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களுக்கு ‘Ops Gempa’, தொற்றுநோய் பரவலை எதிர்கொள்ள ‘Ops Wabak’ ஆகிய சிறப்பு நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, ரானாவ் பகுதியில் T313 மின்சாரப் பரிமாற்றக் கோபுரம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து சபாவின் கிழக்குக் கடற்கரையோர எட்டு மாவட்டங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.
மேலும், சூக் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 42 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் கம்போங் டாலிட் கானாவிலுள்ள SLDB பல்நோக்கு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சபா மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.






















