யானை மீது அமர்ந்து திருமணம் செய்த 59 காதல் ஜோடிகள்

காதலர் தின ஸ்பெஷல்
புதுடெல்லி:
காதலில் பலவகை உண்டு. யானைக் காதல் பற்றித் தெரியுமா? இதோ! யானையில் அமர்ந்து காதலை திருமண பந்தத்திற்கு மாற்றிய 59  காதல் ஜோடிகள்.

மாத்தி யோசி என்பது இன்றைய தலைமுறையினரின் தாரக மந்திரமாக இருக்கிறது. ‘பழைய கள்ளு, புதிய மொந்தையில்’ என்ற பழமொழியை உண்மையாக்குவதைப் போல, திருமணம் என்ற சமூக பந்தத்தில் இணையும் நிகழ்ச்சியை புது மாதிரியாக இந்த தம்பதிகள் நடத்தியிருக்கின்றனர்.

மணமேடையில் அமர்ந்து, நல்ல நாள், முகூர்த்த நேரம் பார்த்து தாலி கட்டிக் கொள்வது வழக்கம். அந்த வழக்கம் என்ற பழக்கத்தை மாற்றிக் காட்டியுள்ளனர் தாய்லாந்து நாட்டின் காதலர்கள்,

தாய்லாந்தைச் சேர்ந்த இந்த ஜோடிகள் காதலர் தினத்தில் யானைகளின் மேல் அமர்ந்து வாழ்க்கைப் பயணத்தில் இணைந்தனர்.

கிழக்கு பாங்காக் (Bangkok) மாகாணத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் காதலர் தினத்தன்று இவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த பிரம்மாண்ட விழாவில் ஐம்பத்தி ஒன்பது தம்பதிகள், யானை சவாரி செய்து கொண்டே திருமணம் செய்து கொண்டனர்.

மேள தாள வரவேற்புடன் யானைகளின் ஊர்வலம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சி என்றால், நடனக் கலைஞர்கள் நர்த்தனமாட, இசைக் கலைஞர்கள் இசைத்திட வித்தியாசமான திருமண நிகழ்வு பிரம்மாண்டமானதாக இருந்தது.

தம்பதிகள் மட்டுமா யானையில் பயணம செய்தனர். திருமணத்தை பதிவு செய்யும் அதிகாரியும் ஒரு யானையில் அமர்ந்து திருமண உரிமத்தில் தம்பதிகள் கையெழுத்திட்டதை மேற்பார்வையிட்டார்.

“என்னைப் பொறுத்தவரை, என்னுடைய திருமணம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அது நடந்தேறியது” என்று மணமகன் பட்டிபட் பாந்தனான் தனது கனவு நனவான கதையைச் சொல்கிறார். இந்த 26 வயது இளைஞன், 23 வயது மணமகளுடன் யானையில் அமர்ந்து திருமணம் செய்து கொண்டார்.

யானையில் அமர்ந்து திருமணம் செய்யும் இந்த பாரம்பரியம் சோன்பூரி மாகாணத்தில் உள்ள நோங் நூச் என்ற தோட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகும். பொதுவாக இதில் நூறு ஜோடிகள் பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மணமக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

பார்வையாளர்களுக்கான கடுமையான ஸ்கிரீனிங் நெறிமுறைகள் காரணமாக, மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக நோங் நூச் தோட்டத்தின் தலைவர் கம்போன் டன்சாச்சா தெரிவித்தார். கொரோனாவின் பரவலுக்குப் பிறகு இப்போதுதான் மக்கள் இந்த தாவரவியல் பூங்காவைப் பார்வையிட திரும்பி வரத் தொடங்கியுள்ளனர் என்று கூறுகிறார்.

பெரும்பாலான வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஒதுக்கி வைத்த தாய்லாந்து, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் விதித்த பயணத் தடையை இன்னும் நீக்கவில்லை.

தாய்லாந்து சுற்றுலாவை மையமாக கொண்ட நாடாக இருந்தாலும், பயணத்தடையை இன்னும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here