டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டை மாடத்தில் ஏறிய நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது சிலர் செங்கோட்டை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். செங்கோட்டையில் சீக்கிய மத கொடியும் ஏற்றப்பட்டது.
இதுதொடர்பாக பஞ்சாபி நடிகர் தீப் சித்து, வாளைச் சுழற்றி போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்திய மனீந்தர் சிங் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மனீந்தர் சிங்கின் கூட்டாளிகளில் ஒருவரான ஜஸ்பிரீத் சிங் (29) கைது செய்யப்பட்டார்.
வடமேற்கு டெல்லி பகுதியில் உள்ள ஸ்வரூப் நகரைச் சேர்ந்த ஜஸ்பிரீத்சிங்கை குற்றவியல் பிரிவு தனிப்படை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். செங்கோட்டை மாடத்தின் மீது ஏறிய ஜஸ்பிரீத் சிங், அங்கிருந்து சில ஆட்சேபகரமான சமிக்ஞைகளை காட்டினார் என்று போலீசார் தெரிவித்தனர்.