அமெரிக்காவின் ஆப்பால் கதிகலங்கிய ஹூவாய்…!

மாற்றுத்தொழிலில் களமிறங்கியது! 

உலகின் புகழ்பெற்ற செல்போன் நிறுவனமான ஹூவாய் (Huawei), அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை காரணமாக நெருக்கடியை சமாளிக்க, பன்றி வளர்க்கும் தொழிலில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறது.

ஹூவாய் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட செல்போன் முதல் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வரை என உலகளவில் வரவேற்பு பெற்று, உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்தது. இந்த நிறுவனம் தயாரித்த ஹூவாய் , ஹானர் (Honor) போன்ற ஸ்மார்ட் போன்கள், உலகளவில் பிரபலம் அடைந்தது. இதுமட்டுமல்லாது தொழில்நுட்பத் துறையிலும் சிறந்து விளங்கியது.

இந்த நிலையில், அமெரிக்கா, சீனாவுக்கு இடையேயான மன கசப்பு , பனிப்போர் காரணமாக பொருளாதாரத்தடை விதிக்கப்பட்ட நிலையில், இதில் சிக்கிக் கொண்ட டிக் டாக் நிறுவனத்தைப் போல, தற்போது ஹூவாய் நிறுவனம் சிக்கிக் கொண்டுள்ளது.

சீன அதிபர் ஜீ ஜின்பிங்க்குக்காக ஹூவாய் நிறுவனம் கோடிக்கணக்கான அமெரிக்கர்களை வேவு பார்த்து வந்ததாகவும், அதனால் அமெரிக்காவின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹூவாய் நிறுவனத்திற்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

இந்த பொருளாதாரத்தடையை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு விதித்தது. இதனால் கடுமையான அளவு பாதிக்கப்பட்ட ஹூவாய் நிறுவனம், 5 ஜி தொழில்நுட்பத்திற்கு தேவையான மைக்ரோசிப் உட்பட தொழில்நுட்ப பொருட்களை இறக்குமதி செய்ய இயலாமல், 4 ஜி வகை ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய முடிவு செய்தது. இதனால், 2020 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் விற்பனை 42 விழுக்காடு அளவுக்கு சரிந்தது.

இதனையடுத்து நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த ஹூவாய் நிறுவனம், பன்றி வளர்ப்புத் துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், உலகிலேயே மிகப்பெரிய பன்றி வளர்ப்பு துறையாக கருதப்படும் நாடாக சீனா இருந்துவரும் நிலையில், இறைச்சிக்காக வளர்க்கப்படும் பண்ணைகளில் பாதிக்குமேல் சீனாவில் இருக்கிறது.

பன்றி வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத்தை புகுத்த்துதல், பன்றிகளுக்கு ஏற்படும் நோய்களை அடையாளம் காணுதல், நடமாட்டத்தை கண்காணிப்பது, எடை, உணவு ஆகியவற்றை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here