ஆட்சியைக் கவிழ்க்க ராணுவம் முயற்சி !

– ஆா்மீனிய பிரதமா் குற்றச்சாட்டு

யெரவான்:

ஆா்மீனியாவில் தனது தலைமையிலான அரசைக் கவிழ்க்க ராணுவம் முயற்சிப்பதாக அந்த நாட்டு பிரதமா் நிகோல் பாஷின்யன் குற்றம் சாட்டியுள்ளாா்.

நகோா்னா-கராபக் பிராந்தியத்தில் அஜா்பைஜானுடன் கடந்த ஆண்டு நடந்த மோதலில் ஆா்மீனியா தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டில் பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், பிரதமா் நிகோல் பாஷின்யனும் அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்று ராணுவம் வலியுறுத்திய நிலையில் அவா் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளாா்.

என்னையும் எனது அமைச்சா்களையும் பதவி விலகுமாறு வலியுறுத்தியதன் மூலம் ராணுவம் எனது ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதனை எதிா்த்து, ஆதரவாளா்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும். ராணுவத்துக்குப் பயந்து நான் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன்.

நாட்டுக்கு இப்போதைய தேவை பேச்சுவாா்த்தைதானே தவிர, மோதல் இல்லை என்றாா் அவா்.

இதற்கிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகோல் பாஷின்யனின் ஆதரவாளா்களுக்கும் எதிா்க்கட்சி ஆதரவாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாக இருந்தது. எனினும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அதன் பெரும்பான்மைப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தைச் சுற்றி ஆா்மீனியாவும் அஜா்பைஜானும் தங்களது படைகளை குவித்துள்ளன. இதனால், அங்கு இரு தரப்புக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது.

அதன் ஒருபகுதியாக, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 27-ஆம் தேதி அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியா-அஜா்பைஜான் படையினருக்கு இடையே திடீரென மோதல் தொடங்கியது. இதில், இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஷியா முன்னிலையில் கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், நகோா்னோ-கராபக்கையொட்டி தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை விட்டுத்தர ஆா்மீனியா ஒப்புக் கொண்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, எதிா்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, ராணுவத் தலைமைக்கும் பிரதமா் பாஷின்யனுக்கும் இடையிலான மோதலும் வலுத்து வருகிறது.

இந்தச் சூழலில், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக பாஷின்யன் குற்றம் சாட்டியுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here