துபாயைச் சேர்ந்த இந்திய பெண் தொழிலதிபரும், வளரும் நடிகையுமான கஞ்சனா நாயர், பாரம்பரிய இந்திய புடவை அணிந்து சைக்கிள் ஓட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தேசிய கொடி வண்ணத்தில் அசத்தல்
அமீரக தேசிய கொடியின் வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், சிவப்பு நிற புடவை, பச்சை நிற ரவிக்கை அணிந்து, தலையில் மல்லிகை பூ சூடியபடி அவர் சைக்கிள் ஓட்டினார். எளிதான தூரத்தை தேர்வு செய்யாமல், சவாலான 10 கிலோ மீட்டர் தூரத்தை தேர்ந்தெடுத்து, அதனை வெற்றிகரமாக கடந்தும் சாதனை படைத்துள்ளார்.
26 ஆண்டுகளுக்கு பிறகு சைக்கிள் பயணம்
இதுகுறித்து மகிழ்ச்சியுடன் பேசிய கஞ்சனா நாயர், “கடந்த 2000-ஆம் ஆண்டு பள்ளிப் பருவத்தில் சைக்கிள் ஓட்டியது. சுமார் 26 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் மீண்டும் சைக்கிள் ஓட்டுகிறேன். புடவையில் எந்தச் சிரமமும் இன்றி, பாடல்களைப் பாடிக்கொண்டே மிகுந்த நம்பிக்கையுடன் பயணித்தேன்” என்றார்.
மேலும், “கடந்த 14 ஆண்டுகளாக வசித்து வரும் ஐக்கிய அரபு அமீரகம் எனது இரண்டாவது வீடு. எனக்குப் பல அங்கீகாரங்களை வழங்கிய இந்த நாட்டிற்கு நன்றி செலுத்தும் விதமாகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நிறுவனம்
அஜ்மானில் ‘சபா அல் அரப் ரியல் எஸ்டேட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் கஞ்சனா நாயரின் இந்த செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.















