இந்தியாவின் உள்விவகாரத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் எப்படி விசாரிக்கலாம்?

 –இந்தியா காட்டம்

புதுடெல்லி:
இந்தியாவின் வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றது குறித்து இந்தியா கண்டனம் தெரிவித்திருக்கிறது. மற்றொரு ஜனநாயக நாட்டின் அரசியலில் அத்துமீறி தலையிடும் செயல் இது என்று இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரிடம் இந்தியாவின் எதிர்ப்பை தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியா செவ்வாய்க்கிழமையன்று, பிரிட்டனின் ஹை கமிஷனரை வரவழைத்து பேசியது. இந்தியாவின் விவசாயச் சட்டங்கள் குறித்த இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது தேவையற்றது, பிற நாட்டின் அடிப்படை விஷயத்தில் தலையிடும் அநாவசியமான விஷயம் என்று கண்டனம் கடுமையாக பதிவு செய்யப்பட்டது.

100 நாட்களுக்கு மேலாக டெல்லியின் பல எல்லைப் பகுதிகளில் விவசாய சட்டங்களை எதிர்த்த போராட்டக்காரர்கள் மீது “பலப் பிரயோகம் நடத்தப்பட்டது” தொடர்பான பிரச்சனைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நேற்று மாலை விவாதித்ததை அடுத்து  இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

இந்தியாவின் வேளாண் சட்ட சீர்திருத்தங்கள் குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடந்த கலந்துரையாடல்கள் மற்றொரு ஜனநாயக நாட்டின் அரசியலில் பெரும் தலையீட்டைக் குறிப்பதாக வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தூதரிடம் தெரிவித்தார் என்று வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs) தெரிவித்துள்ளது.

“நிகழ்வுகளை தவறாக சித்தரித்து வாக்கு வங்கி அரசியலை நடத்துவதை பிரிட்டிஷ் எம்.பி.க்கள் தவிர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்திய இந்திய வெளியுறவு செயலாளர், குறிப்பாக மற்றொரு ஜனநாயக நாடு தொடர்பாக இந்த போக்கு தவறானது என்று வெளியுறவு செயலாளர், பிரிட்டன் தூதருக்கு அறிவுறுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் இயற்றப்பட்ட மூன்று புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் தலைவர்கள் உறுதியாக உள்ளனர், இது கார்ப்பரேட்டுகளுக்கு பயனளிக்கும் என்றும் சந்தை முறையையும், குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்ற சித்தாந்தத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் விவசாயிகள் நம்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here