– பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை
அந்த வகையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு) சுகாதாரத்துறை அனுப்பிவைத்தது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 17 ஆயிரத்து 500 டோஸ் வந்தது. இதன் பின்னர் பல்வேறு கட்டங்களாக 58 ஆயிரம் டோஸ் திருப்பூருக்கு வந்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமாகும். இதன் காரணமாக கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையிலும், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வகையிலும் 17 ஆயிரத்து 500 டோஸ் முதலில் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதலாக பல்வேறு கட்டங்களாக 58 ஆயிரம் டோஸ் (கோவிஷீல்டு) வந்துள்ளது.
இதிலும் தற்போது 18 ஆயிரம் டோஸ் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டது. மீதம் 40 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு கைவசம் இருப்பு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் எந்த நேரத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். போதுமான அளவு இருப்பும் கைவசம் உள்ளது. இதுபோல் கோவேக்சின் 6 ஆயிரம் டோஸ் மாவட்டத்திற்கு வந்தது. இதுவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தற்போது கைவசம் 2 ஆயிரத்து 300 டோஸ் இருப்பு உள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்கும். அச்சமின்றி பொதுமக்கள் செலுத்திக்கொள்ளலாம்.