கொரோனா வைரஸின் தோற்றம்

கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்!: WHO

லண்டன்:

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து கண்டறிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலக நாடுகள் அனைத்திலும் தன் பிடியை இறுக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முடிவுகட்ட தடுப்பூசி ஒன்றே  நிலையான தீர்வு என மருத்துவ விஞ்ஞானிகள் உணர்ந்ததும், உலகம் முழுவதும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டறிய சில ஆண்டுகள் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவ தொடங்கியது என்பதை கண்டறிய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு குறித்து லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பை சேர்ந்த நிபுணரான பீட்டர் டாஸ்ஸாக், வூஹானில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வு குறித்த அறிக்கை அடுத்தவாரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்ட விலங்கில் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்று பரவியது குறித்து தொடர்ச்சியான ஆய்வுகளின் மூலம் கண்டறிய முடியும் என தெரிவித்த அவர், கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து முழுமையாக அறிய ஒரு சில ஆண்டுகள் ஆகலாம் என தெரிவித்தார்.

வூஹானில் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பலருக்கு வனவிலங்கு வர்த்தகத்துடன் தொடர்பு உள்ளதாகவும் பீட்டர் டாஸ்ஸாக் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here