ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள்; பதிலடி பலமாக இருக்கும். இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரான்!

 இஸ்ரேல் சிறிய அளவிலான படையெடுப்பில் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய மற்றும் பயங்கரமான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி எச்சரித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்புக்கு உதவி செய்வதாக கூறி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ம் தேதியன்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. அதில் இரண்டு ராணுவ உயரதிகாரிகள் உள்பட ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படையினர் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் கடந்த சனிக்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை முறியடித்தது இஸ்ரேல். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்தச் சூழலில், ”இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துக்கொள்ள வேண்டும்” என்று ஈரான் சமீபத்தில் எச்சரித்தது. “இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும்” என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது.

ஈரானின் தெஹ்ரான் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த அணிவகுப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் நீண்ட தொலைவு சென்று தாக்கக் கூடிய பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவ சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ராணுவ தளபதிகள், உயரதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனை பார்வையிட்ட பின்னர் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து கொள்ள வேண்டும். சிறிய அளவிலான படையெடுப்பில் இஸ்ரேல் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய அளவில் மற்றும் பயங்கர பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்தார். இந்தநிலையில் ஈரான் தாக்குதலில் ஈடுபடாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி ஐரோப்பிய நாடுகள் கேட்டு கொண்டுள்ளன.

இதேபோன்று, இஸ்ரேலின் கூட்டணி நாடுகளும் நெதன்யாகுவிடம் தாக்குதலை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆனால், ”கூட்டணி அரசுகளின் கோரிக்கை ஒருபுறம் இருந்தபோதும், தற்காப்புக்காக இஸ்ரேல் தன்னுடைய சுய முடிவை எடுக்கும்” என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதனால், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here