ஸ்டாலினுக்கு காரில்லை; எடப்பாடிக்கு நிலமில்லை; சீமானுக்கு வருமானமே இல்லை! – சொத்துக்கணக்கு சோகங்கள்

மேடையில் மைக் பிடித்து, எதிர்க்கட்சியினரை வசை பாடுவதும், ‘ஒண்டிக்கு ஒண்டி வர்றியா’ என்று சவால் விடுப்பதும் தமிழக அரசியலில் ரொம்பப் பழசு. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என இணையம் வழியே எதிர்க்கட்சியினரை விமர்சனம் என்ற பெயரில் கிழித்துத் தொங்கவிடுவதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்.

2021 சட்டமன்றத் தேர்தலில், இணைய வழியிலான பிரசாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதைப் புரிந்துகொண்ட கட்சிகள் தங்கள் சாதனையையும் தேர்தல் வாக்குறுதிகளையும் இணையம் வழியே பரப்புவதில் அக்கறை காட்டிவருகின்றன. ஆனால், அதே கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவர்களைப் பஞ்சராக்கும் மீம்ஸ்களை தயார் செய்து இணையம் வழியே பரப்புவதிலும் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றன.

எடப்பாடி பழனிசாமி வேட்புமனுஎடப்பாடி பழனிசாமி வேட்புமனு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் வேட்புமனுவில் ‘வருட வருமானம் ஆயிரம் ரூபாய்’ என்று குறிப்பிட்டுவிட, சீமானின் தினப்படி வருமானம் வரைக் கணக்கிட்டு மீம்ஸ் வழியே சில்லறையை சிதறவிட்டனர் நெட்டிசன்கள். சுதாரித்துக்கொண்ட சீமான், வருமானத்துக்கு பதிலாக வரியைக் குறிப்பிட்டுவிட்டதாகச் சொல்லி, அடுத்த சில நாட்களிலேயே திருத்தப்பட்ட புதிய வேட்புமனுவைத் தாக்கல் செய்து நெட்டிசன்கள் தாக்குதலிலிருந்து தப்பித்தார்.

மைக் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் ‘நானும் விவசாயி, நானும் விவசாயி’ என்று விரட்டி விரட்டி பிரசாரம் செய்துவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேட்பு மனுவில், அவருக்கென்று சொந்தமாக ஒரு சென்ட் இடம்கூட குறிப்பிடப்படவில்லை. இதைக் குறிவைத்த மாற்றுக்கட்சியினர் `துண்டு நிலம்கூட இல்லாத எடப்பாடி பழனிசாமி, விவசாயக் கூலியாகத்தானே இருக்கமுடியும்’ என்று லாஜிக்கலாக கேள்வியெழுப்பி வறுத்தெடுத்தனர்.

இந்தப் பட்டியலில், அண்மையில் இணைந்திருப்பவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இவர் தனது வேட்புமனுவில், அசையும் சொத்தாக வாகனம் எதுவும் தன் பெயரில் இல்லை என்று குறிப்பிடவே, `மு.க.ஸ்டாலினிடம் சொந்தமாக ஒரு கார்கூட இல்லையா? வாடகைக் காரிலா ஓட்டு கேட்டு வருகிறார்?’ என்றெல்லாம் கிண்டலடித்து பரபரக்கின்றன மீம்ஸ்கள். ஸ்டாலின் பற்றிய இந்த மீம்ஸ்களை ஆர்வமாக ஃபார்வேர்டு செய்துவருபவர்களுக்குத் தெரியுமா,எடப்பாடி பழனிசாமிக்கும்கூட சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை என்று?

ஆயிரம் கோடி, லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிக்கொண்ட தலைவர்களும்கூட, தங்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லை, வாகனம் இல்லை என்று அஃபிடவிட் தாக்கல் செய்வதைக்கூட நம்பிவிடலாம். ஆனால், அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்விதமாக `தங்களுக்கு இன்னும் கடன் பாக்கி இருக்கிறது’ என்று வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் தலைவர்களைப் பற்றி என்னவென்று சொல்ல?

மு.க.ஸ்டாலின் வேட்புமனுமு.க.ஸ்டாலின் வேட்புமனு

உதயநிதி ஸ்டாலினுக்கு 1.35 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறதாம். துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மனைவிக்கு 65.55 லட்ச ரூபாயும், மகன் ரவீந்திரநாத்துக்கு 2.06 கோடி ரூபாயும் கடன் இருக்கிறதாம். முதல்வர் பழனிசாமியும் 15 லட்சம் ரூபாய் கடன் பெற்று இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒருவேளை முதல்வரும் ‘அந்த’ 15 லட்சம் வருமென்று நம்பி கடன் வாங்கி வைத்திருக்கிறாரோ என்னமோ.

கமல்ஹாசனோ 49.5 கோடி ரூபாய் கடனில் இருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் வானதி சீனிவாசன் 22 லட்சம் ரூபாய் கடனோடு வாழ்க்கை நடத்திவருகிறார். தமிழகம்தான் கடனில் தத்தளிக்கிறது என்றால், பாவம் தலைவர்களும் கடனில்தான் தத்தளிக்கிறார்கள்.

அரசியல் தலைவர்களின் இந்த அட்ராசிட்டிகள் குறித்து பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான கோலாகல ஶ்ரீனிவாஸிடம் பேசியபோது, இவ்வளவு பெரிய தலைவர்களுக்கு சொந்தமாக காரோ, நிலமோ இல்லாதது உண்மையிலேயே ரொம்பவும் சோகமான விஷயம்தான். இதையே நீங்கள் ரொம்பவும் தோண்டி துருவிப் பார்த்தாலும்கூட உண்மையிலேயே இந்தத் தலைவர்களுக்கு கார் இருக்காதுதான். ஏனெனில், இவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, அரசே வாகனம் வழங்கிவிடுகிறது. ஆட்சிப் பொறுப்பில் இல்லாத நேரத்திலும்கூட திடீரென தலைவர் மதுரைக்குச் செல்கிறார் என்றால், அங்கேயுள்ள பெரிய மனிதர் தலைவருக்காக பென்ஸ் காரையே அனுப்பிவைத்துவிடுவார். ஆக, உண்மையிலேயே இவர்களுக்கு காரோ, ஒரு துண்டு நிலமோ இல்லையென்பது நிஜமான காமெடிதான்.

இதுமட்டுமல்ல, தலைவர்கள் பலரின் பெயரில் கடனும் இருக்கிறது. அந்தக் கடனையும்கூட சம்பந்தப்பட்ட தலைவர் கட்டிக்கொண்டிருக்கமாட்டார். அவருக்கு ‘கடன்பட்டவர்கள்’தான் தலைவர் பெயரில் கடனை செலுத்திக்கொண்டிருப்பார்கள். நாளையே தலைவரது சொத்துக்கணக்கு குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால், இன்றைய தேதிவரையிலும் தான் கடன் கட்டிக்கொண்டு சிரமத்தில் இருந்துவருவதாக காட்டிக்கொள்வார்கள்.

ஜனநாயக நாட்டில் இதுபோன்ற விஷயங்களைப் பார்த்ததுமே நமக்கு ‘பளிச்’சென்று சிரிக்கத் தோன்றுகிறது. ஆனால், இந்தத் தலைவர்கள் சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்புவதற்கும் ‘எழுத்துப் பிழை’ என்று விளக்கம் சொன்னால் ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களது கட்சித் தொண்டர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

கோலாகல ஶ்ரீனிவாஸ்கோலாகல ஶ்ரீனிவாஸ்

1960, 70-களில் இதுபோன்ற செய்திகள் வெளியானால், பொதுமக்களுக்கு உண்மையாகவே ‘ஷாக்’காக இருந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக இதைப் பார்த்துப் பழகிவிட்டதால், இப்போதெல்லாம் இதை ஒரு பொருட்டாகவே மக்கள் கருதுவது இல்லை. எப்படி ஒரு முழு நீள திரைப்படத்தில் இடையிடையே நகைச்சுவைக் காட்சிகளை பார்த்து ரசிக்கிறார்களோ, அதே மனநிலையில் மக்களும் இந்த செயல்பாடுகளைப் பார்த்து சிரித்து கடந்து போய்விடுகிறார்கள்.

மாறாக எந்தவொரு கட்சியையும் சாராது சொற்ப எண்ணிக்கையில் இருக்கின்றவர்களே தலைவர்களின் இதுபோன்ற காமெடிகளை எதிர்த்து கேள்வி கேட்கின்றவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும்கூட இவர்கள் கேள்வி கேட்பதற்கான சரியான தளம் இல்லாததால், தங்கள் வாக்குகளை நோட்டாவுக்கும் சில சுயேட்சை வேட்பாளர்களுக்குமாக வாக்களித்துக்கொண்டு அதிகாரமற்றவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here