பசுமைகுரல் அமைப்பு ஏற்பாடு
குளுவாங் –
பசுமையை நோக்கி எனும் உலகலாவிய செயல்பாட்டின் வாயிலாக எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி உலக, ஆசிய சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்று சாதனையைப் பதிவு செய்துள்ளது.
மொத்தம் 25 மாணவர்கள் பயிலும் இந்த தோட்டத் தமிழ்ப்பள்ளி பல போட்டிகளில் கலந்து இமாலய சாதனையை புரிந்து வருகிறது.
உலகளாவிய நிலையில் கிரீன் வொய்சஸ் (பசுமைக் குரல்) அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 31,958 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொண்ட னர்.
எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இதில் பங்கு பெற்றது சிறப்பு அம்சமாகும்.மாணவர்களும் ஆசிரியர்களும் தத்தம் வீடுகளின் சுற்றுப்புறத்தில் மரம் நடுமாறு பணிக்கப்பட்டிருந்தனர்.
இயற்கையைப் பாதுகாத்தல், பூமியை வெப்பத்திலிருந்து காத்தல், பசுமையை நிலைநிறுத்துதல் என இவ்வுலகில் நாம் செய்ய வேண்டிய பெரும் கடமையை எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பெருமைக்குரிய சாதனையை இப்பள்ளிக்கூடம் செய்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் ஆசிரியரின் ஈடுபாடும் தனித்துவமாக திகழ்ந்துள்ளது என கூறினார் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் முருகையா செல்லமுத்து.
இப்போட்டி கடந்தாண்டு 12.12.2020இல் நடைபெற்ற வேளையில் அதற்கான அங்கீகார சான்றிதழ்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலக,ஆசிய சாதனையாளர் புத்தகத்தில் எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெயரும் வரலாறாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணன் இராஜு