இணைப்பைத் தவிர்த்து் இட மாற்றத்திற்கு வழி காணுங்கள்

-கல்வி அமைச்சுக்கு குலசேகரன் வலியுறுத்தல்

பாரிட் புந்தார்- 
நாட்டில் செயல்படும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை இணைக்கும் திட்டத்தில் கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணைப்பில் காட்டும் ஆர்வத்தையும் அவசரத்தையும் இடமாற்றத்தில் காட்டவேண்டும் என்று மனிதவள முன்னாள் அமைச்சர் எம்.குலசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளைk குறிப்பாக 30 மாணவர்களுக்கும் குறைவாகவுள்ள பள்ளிகளை இணைக்கும் முயற்சியில் கல்வி அமைச்சு தற்போது கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

இது அனைத்து மொழிப் பள்ளிகளுக்கும் பொதுவான திட்டமே என்றாலும் தமிழ்ப்பள்ளிகளின் நிலை வேறு.  பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் முந்தைய பிரிட்டிஷார் ஆட்சியில் தோட்டப்புறங்களில் கட்டப்பட்டவைகளாகும். இன்று, இந்தியர்கள் நகர்ப் புறங்களை நோக்கி குடியேறத் தொடங்கிய பின் தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகளில் பயில போதுமான மாணவர்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.இது திடீர் என்று ஏற்பட்ட சூழ்நிலைகள் அல்ல கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட புதிய பொருளாதார கொள்கையின் அடிப்படையில் இன வாரியான வசிப்பிடங்களை மாற்றியமைக்கும் முந்தைய தேசிய முன்னணி அரசாங்கக் கொள்கைக்கு ஏற்பட்ட மாற்றமாகும்.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கத்திற்கு ஏற்ப அப்போதே தமிழ்ப்பள்ளிகளையும் இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களுக்கு இடமாற்றம் செய்திருக்க வேண்டும்.

செய்யத் தவறியது அரசாங்கக் கொள்கை செயலாக்கத்திலுள்ள குறைகளாகும்.இந்தியர்களை பிரதிநிதித்த அன்றைய தலைவர்களும் இதுபற்றி சிந்திக்காமல் விட்டுவிட்டனர். அதன் பின்னர் பல சூழல்களில் தமிழ்ப்பள்ளிகளின் இடமாற்றக் கோரிக்கைகளை தமிழ் ஆர்வலர்கள் முன் வைத்த போதும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

மேலும் இடமாற்றத்திற்கு அரசாங்கம் வைத்துள்ள விதிமுறைகள் இந்திய சமுதாயத்திற்கு முற்றிலும் பொருந்தாததாகும்.புதிய இடங்களை அடையாளம் காண்பதும்,வாங்குவதும்,கல்வி அமைச்சின் மேம்பாட்டுப் பிரிவிடம் அனுமதி கேட்பதும் போன்ற மிக நீண்ட வழி முறைகளும்,நிதி தேவைகளும் இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தா திட்டங்களாகும்.

மேலும் மற்ற மொழி பள்ளிகளைப் பெறுத்தமட்டில் 150 மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் குறைந்த மாணவர் பள்ளிகளாக இருக்கலாம். தமிழ்ப்பள்ளிகளுக்கு அதுவே பெரிய பள்ளிகளாகும்.இந்நிலையில் கொள்கைகள் வகுக்கும் போது பொதுக் கொள்கையுடன் தமிழ்ப்பள்ளிகளுக்கான தனிக்கொள்கை வரைவுகள் உருவாக்க வேண்டும்.

இப்போதுள்ள இணைப்புத் திட்டம் தொடர்பாக செய்யப்படும் கருத்தாய்வு முடிவுகளை செயலாக்கம் செய்வதற்கு முன்னர் இந்திய சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் கல்வி அமைச்சு கண்டறி வேண்டும்.

குறிப்பாக ஆளும் கட்சி,எதிர்கட்சிகளின் தலைவர்கள்,கல்வி அமைச்சின் தமிழ்த்துறை அதிகாரிகள்,தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றங்கள்.பள்ளி்மேலாளர் வாரியப் பிரதிநிதிகள் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரநிதிகள் என்றுத்தமிழ்ப்பள்ளிகளுடன் தொடர்புடைய எல்லாத் தரப்பின் கருதுதக்களையும் கண்டறிந்த பின்னரே முடிவு செய்ய வேண்டும்.

மாறாக கல்வி அமைச்சு செய்யும் தனிப்பட்ட முடிவுகள் ஒருதலைப்பட்சமாகவும் தாய்மொழிப்பள்ளிகளுக்குப் பாதகமாகவும் அமையும் என்று ஈப்போ பாராட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் தமது அறிக்கையில் நினைவுறுத்தியுள்ளார்.

-கவின்மலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here