-நல்ல உறவை பேணவே விரும்புகிறோம்..
டெல்லி:
பாகிஸ்தானுடன் நல்ல உறவை பேண விரும்புகிறோம் என்று பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த மார்ச் 23 ஆம் தேதி பாகிஸ்தானில் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாள் பாகிஸ்தானில் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
பிரதமர் மோடி தனது கடிதத்தில், பாகிஸ்தான் மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒரு அண்டை நாடு என்ற முறையில் பாகிஸ்தானுடன் இந்தியா நல்ல உறவை, நட்பை உருவாக்க விருப்பப்படுகிறது. இதற்கு தீவிரவாதம் இல்லாமல், நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பாகிஸ்தான் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்.
இந்த மோசமான காலகட்டத்தில் நாம் மேன்மையான குணத்தோடு செயல்பட வேண்டும். கொரோனா பரவலை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தானின் மக்களுக்கும், பிரதமர் இம்ரான் கானுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள், என்று பிரதமர் மோடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்தியா பாகிஸ்தான் உறவில் திடீர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்த திங்கள் கிழமை இந்தியாவில் இண்டஸ் கமிஷன் மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக வந்ததும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பாகிஸ்தானின் தேசிய நாளில் இந்திய பிரதமர் பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதுவது வழக்கம். இந்த முறை வழக்கத்தின்படியே கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.