அதிகம் வாசிக்கும் சமுதாயம் வெற்றிபெறும்

 

நீலாய்-

நாளும் அதிகம் புத்தகம் அல்லது நாளிதழ்கள் வாசிக்கும் சமுதாயம், அறிவார்ந்த வெற்றிபெற்ற சமூகமாக உருமாறும் என்கிறார் நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன்.

இங்கு நீலாய் தமிழ்ப்பள்ளி, கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளைச் ஙே்ர்ந்த மாணவர்களுக்கு திங்கள் தொடங்கி வெள்ளிக்கிழமை வரை தலா 10 மக்கள் ஓசை நாளிதழை இவ்வாண்டு முழுவதும் தனது அன்பளிப்பாக வழங்க நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அவர் முன் வந்தார்.

தமிழ்ப்பள்ளி, தமிழ்ப்பத்திரிகை ஆகிய இரண்டும் இந்நாட்டு தமிழ் இனத்தை இந்த உலகுக்கு அடையாளம் காட்டுகின்றன. தமிழ் பேசும் இந்தியர்களுக்கு ஓர் உறவுப் பாலமாகவும் அவை திகழ்கின்றன எனக் குறிப்பிட்ட மாநில மனிதவளம், தோட்டப்புறம் மற்றும் இஸ்லாம் அல்லாதவர் விவகார நடவடிக்கைத் துறைத் தலைவருமான அருள்குமார், இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை இயல்பாகவே தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்ப்பள்ளி உங்கள் தேர்வாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், உங்களால் இயன்ற உதவிகளை தமிழ்ப்பள்ளிக்குச் செய்வதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள் என பிறர் சொல்லித்தான் அனுப்ப வேண்டுமா? தமிழ்ப்பள்ளி என்பது உங்களின் உணர்வில் கலந்திருக்க வேண்டும். 

 

அதேவேளை தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பு முதன்மையானது, தமிழ்மொழிக்கு அவர்கள்தான் முதன்மைப் பணியாளர்கள் என்றும் அவர்களுக்குப் புகழாரம் சூட்டினார்.

அதேவேளை பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது என்றும் அவர்களுக்கு நிரந்தர சொத்தாக கல்வியைச் சேமித்துத் தர வேண்டிய முதன்மைக் குருவாக பெற்றோரான நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அருள்குமார் பெற்றோரைக் கேட்டுக் கொண்டார்.

நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here