மீண்டும் சூயஸில் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

 -கச்சா எண்ணெய் விலை குறையலாம்

கெய்ரோ

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதால் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

கடந்த 23 ஆம் தேதி அன்று சூயஸ் கால்வாயை எவர்கிரீன் என்னும் சரக்கு கப்பல் கடந்து செல்லும் போது கால்வாயின் இடையே சிக்கியது. இந்த கப்பல் சீனாவில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சரக்குகளை எடுத்துச் சென்றது. கால்வாய்க்கு குறுக்கே கப்பல் சிக்கியதால் இரு புறமும் 367 கப்பல்கள் நகர முடியாமல் போனது.

இந்த கப்பல்களில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த முடக்கத்தால் எகிப்து அரசு நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி இழப்பைச் சந்தித்தது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்தது. இந்த கப்பல்களில் உள்ள ஊழியர்களின் உணவு பிரச்சினையும் அதிகரிக்கத் தொடங்கியது.

எவர்கிரீன் கப்பல் தரை தட்டிய இடத்தில் 18 மீட்டர் ஆழம் வரை 27000 கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் தோண்டி எடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் அதிகாலையில் இந்த கப்பல் மிதக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டு நேர் கோட்டில் நிறுத்தப்பட்டது.

தற்போது இந்த கப்பல் பயணத்தைத் தொடங்கியதால் சூயஸ் கால்வாயில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

இருப்பினும் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப மேலும் சில நாட்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கியதையொட்டி சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here