ரஃபேல் ஒப்பந்தத்துக்காக இந்திய இடைத்தரகருக்கு ரூ.8.61 கோடி

 -வழங்கப்பட்டதாக புதிய சர்ச்சை!

ரஃபேல் போர் விமானம் கொள்முதலில் இந்திய இடைத்தரகருக்கு ரூ.8.61 கோடி வழங்கப்பட்டதை பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு கண்டுபிடித்துள்ளதாக பிரெஞ்சு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, இந்திய விமானப் படைக்கு ரஃபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு, ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 2014- இல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும், 2016- இல் பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, 36 விமானங்களை ரூ.58,000 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்தது.

காங்கிரஸ் அரசு ஒரு விமானத்தை ரூ.350 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்த நிலையில், ரூ.1,670 கோடிக்கு வாங்க பாஜக அரசு ஒப்பந்தம் செய்தது விவாதப்பொருளாக மாறியது. இதையடுத்து ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பாஜக அதனை மறுக்கிறது.

526 கோடி ரூபாய் மதிப்புள்ள ரஃபேல் விமானத்தை ஏன் 1,670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? 126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் வாங்கியது ஏன்? என ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.

இதற்கு பாஜக தரப்பில் விளக்கமளிக்கையில், ‘ரூ.526 கோடிக்கு காங்கிரஸ் வாங்க நினைத்த போர் விமானங்கள், வெறுமனே பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் மட்டுமே உரியவை. ஆனால், நாங்கள் வாங்குவது, போர் தளவாடங்கள், இதர தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட முழுமையான போர் விமானங்கள். இவை அதைவிட உயர் தரத்துடன் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது பிரெஞ்சு இணையதள பத்திரிகையான மீடியா பார்ட், ரஃபேல் போர் விமானம் கொள்முதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இடைத்தரகருக்கு 1.1 மில்லியன் யூரோ (ரூபாய் மதிப்பில் 8.61 கோடி) வழங்கப்பட்டதை பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தொகையை ரஃபேல் போர் விமானத் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் வழங்கியுள்ளதாகவும் மீடியா பார்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இடைத்தரகருக்கு ரூ.8.62 கோடி வழங்கியதற்கு டசால்ட் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றும் அந்த நிறுவனத்தின் மொத்த வரவு செலவு கணக்கை ஒப்பிடுகையில் அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்த தொகையில் பெருத்த வித்தியாசம் இருப்பதாகவும், இதில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் ‘மீடியா பார்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

50 டம்மி ரபேல் மாடலுக்காக கொடுக்கப்பட்ட பணம்தான் இது என்று டசால்ட் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் இந்த டம்மி ரபேல் விமானங்களை வாங்கியதற்கான ஆதாரம் எதுவும் டசால்ட் நிறுவனத்திடம் இல்லை.

அதோடு பணப் பரிவர்த்தனையில் டம்மி மாடல் என்பதை பற்றி டசால்ட் நிறுவனம் எதுவும் சொல்லவில்லை. மாறாக இந்தியாவில் இருக்கும் தரகருக்கு அளிக்கப்படும் பரிசு என்று மட்டுமே கூறப்பட்டுள்ளதாக ‘மீடியா பார்ட்’ செய்தியில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here