டெல்லி கங்காராம் மருத்துவமனையில் பணிபுரியும் 37 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
டில்லி:
தற்போது, நாடெங்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது.இதனால் அந்தந்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தலைநகரான டெல்லியில் ஒரே நாளில் 7,437 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆகையால் வரும் நாட்களில் மேலும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதனால் டெல்லி அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், பல் மருத்துவர்கள், ஆயுஷ் டாக்டர்கள் போன்றோர் கொரோனா சிறப்பு வார்டில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 115 தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத ICU மற்றும் படுக்கைகளை ஒதுக்கும்படியும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இச்சமயத்தில், சர் கங்காராம் மருத்துவமனையில் பணிபுரியும் 37 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது,”சர் கங்கா ராம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதனால் பாதிக்கப்படவர்களுக்கு சிகிச்சை அளித்த 37 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட டாக்டர்களில் 32 பேர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்”,என தெரிவித்துள்ளனர்.