நான் தான்… நான் மட்டும் தான்… அடுத்த 15 ஆண்டுகள்’.. ரஷ்ய அதிபர் புதினின் அதிமுக்கிய உத்தரவு

மாஸ்கோ: ரஷ்யா அதிபர் பதவியில் வரும் 2036ஆம் ஆண்டு வரை தொடரும் வகையில் புதிய உத்தரவை விளாடிமிர் புதின் பிறப்பித்துள்ளார். இதன் மூலம் அடுத்த இரண்டு தேர்தல்களில் அவரால் போட்டியிட முடியும்.

ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். 68 வயதாகும் புதின், முதன்முதலில் கடந்த 2000ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபர் பதவியை ஏற்றார். அவரது பதலிகாலம் வரும் 2024இல் நிறைவடைகிறது.

இந்நிலையில், 2036ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதிபர் பதவியில் தொடர தேவையான சட்டத்திற்கு புதின் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய சட்டம்

ரஷ்யா நாட்டு சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது. இந்தச் சட்டத்தை மாற்றி, ஒருவர் நான்கு முறை வரை தொடர்ந்து அதிபர் பதவியில் இருக்கும் சட்டத்தை புதின் கடந்தாண்டு முன்மொழிந்தார். இது குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இதையடுத்து இந்தச் சட்டத்திற்கு புதின் நேற்று ஒப்புதல் வழங்கினார்.

2036 வரை

இந்தச் சட்டத்தின் மூலம் அடுத்த இரண்டு தேர்தல்களில் புதினால் தேர்தலில் போட்டியிட முடியும். அதாவது 2036ஆம் ஆண்டு வரை அதிபர் ரேசில் அவரால் இருக்க முடியும். உயிருடன் இருக்கும் வரை அதிபர் பதவியில் தொடரவே புதின் இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

அதிபர் புதின்

ரஷ்யா அதிபராக புதின் கடந்த 2000ஆம் ஆண்டு முதலில் பதவியேற்றார். அதன் பின்னர் 2004இல் மீண்டும் அவர் தேர்தலில் வென்றார். அந்நாட்டு சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக அதிபராக இருக்க முடியாது என்பதால் 2008இல் தனது நம்பிக்கைக்குரிய டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரை அதிபராக்கினார். அப்போது தான் அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.

தேர்தல் குளறுபடிகள்

அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு மீண்டும் புதின் ரஷ்ய அதிபராகப் பதவியேற்றார். ஆறு ஆண்டுகள் அதிபர் பதவியில் இருந்த புதின், மீண்டும் 2018இல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் எதிர்க்கட்சியினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தன. இருப்பினும், அந்தத் தேர்தலில் புதின் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here