மருத்துவமனையில் நடிகர் விவேக்

சின்ன கலைவாணர் என்று மதிக்கப்படுபவர்
திடீர் மாரடைப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த இவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து  மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

இவர் அப்துல் கலாம் மீது பற்று கொண்டதால் மரம் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழக அரசின் டெங்கு விழிப்புணர்வு, கரோனா விழிப்புணர்வு, தடுப்பூசி விழிப்புணர்வுக்குப் பிரச்சாரம் செய்தார் விவேக்.

திரைப்படங்களில் நகைச்சுவையோடு, சமூக அக்கறை உள்ள கருத்துகளை நகைச்சுவை மூலம் மக்களிடையே பரப்புவதில் மதிப்பை பெற்றவர் விவேக்.

இவரது சமூக சீர்திருத்தக் கருத்துகளால் சின்ன கலைவாணர் என்றும் அழைக்கப்படுகிறார். சினிமாவைத் தாண்டி சமூக அக்கறை உள்ள விஷயங்களைக் கையிலெடுத்துச் செயல்படுத்துகின்றவர். 

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் (60) முதுகலைப் பட்டதாரியாவார். 1990களில் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர்  நகைச்சுவை , குணச்சித்திர நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். சிறந்த மேடைப் பேச்சாளரும்கூட.

இவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here