அடுத்த 5 ஆண்டுகளில் மலேசியாவுடன் மேற்கொள்ளும் திட்டத்தின் வாயிலாக ஒரு முழுமையான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க மைக்ரோசோப்ட் நிறுவனத்துடன் மலேசியா இணைந்து செயலாற்றும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்திருக்கிறார் .
பெர்சாமா மலேசியா எனும் திட்டத்தை அவர் நேற்று தொடக்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்குக் குறைந்தது ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 4 பில்லியன் வெள்ளி செலவாகும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளில் மலேசியாவில் மைக்ரோசோப்ட் செய்திருக்கும் முதலீட்டில் இதுவே முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
மலேசியாவில் மைக்ரோசோப்டின் முதல் பிரதேச தரவு மையம் அமைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். பல்வேறு நாடுகளில் இருந்து தரவுகளை நிர்வகிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற தரவு மையமாக இது விளங்கும் என்று பிரதமர் சொன்னார்.
இதனால் சுமார் 19 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும். தகவல் தொழில்நுட்பம் தொடர்பான 4 ஆயிரம் வேலை வாய்ப்புகளும் இதில் அடங்கும்.