பிளவு தலைதூக்குகிறதா?

சதா-ரணங்கள் வெகு  சாதாரணமாக!

நாடு எப்போதும் இல்லாத அளவில் தற்போது படுமோசமான நிலையில் பிளவுபட்டிருக்கிறது. அரசியல் மட்டும் அன்றி தேசிய பொருளாதாரக் கொள்கையும் அதற்கான முக்கியக் காரணமாக இருக்கின்றது.

அமைதிப் பூங்காவாகவும் சகிப்புத்தன்மையும் நிறைந்திருந்த மலேசியாவில் இன்று அவை யாவும் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. இன ரீதியாகவும் சித்தாந்தத்திலும் மக்கள் பிளவுபட்டு உள்ளனர்.

இது மொத்தத்தில் இவ்விவகாரங்கள் பல இனங்களைக் கிழித்து பிளவை ஏற்படுத்தி வருகின்றன. ஒரே இனத்தவரும் இன்று நான்கு திசைகைளாகப் பிரிந்து கிடக்கின்றனர்.

மலாய்க்காரர்கள் இனியும் ஒற்றுமையாக இல்லை. மாறுபட்ட அரசியல் சித்தாந்தங்கள் அவர்களைப் பிரித்தும் பிளவுபடுத்தியும் வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளில் இடம்பெற்றுள்ள அவர்கள், அந்தந்த கட்சியின் சித்தாந்தங்களுக்கு ஏற்ப சிந்தனை மாற்றத்திற்கு இடம் கொடுத்து உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கி வருகின்றனர்.

இந்த மாற்றங்கள் நாட்டில் உள்ள மற்ற இனத்தவர்களை வருத்தமுறசெய்யும் வகையில்  நேரடியாகவும் மறைமுகமாகவும் திணிக்கப்படுகின்றன. கருத்து வேறுபாடுகள் வீதி வரையில் வந்து அடித்துக் கொள்ளும் அளவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இப்போது பல இடங்களில் இனங்களுக்கிடையில் சண்டை மூள்வதை ஆங்காங்கே காண முடிகிறது. இதற்கு இனச் சாயம் பூசாவில்லை என்றாலும் அதன் புகைச்சலை மறுப்பதற்கில்லை.

இதுநாள் வரையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு சன்னஞ்சன்னமாக தேய்ந்து வருவதையும் கண்கூடாகவே பார்க்கிறோம்.

கட்டிக் காத்த சகோதரத்துவம் காற்றில் கரைந்து வருகிறது. வார்த்தைகளில் மென்மை காணாமல் போகின்றன. தடித்த வார்த்தைகளும் இனவாதமும் முந்திக் கொண்டு தலைநீட்டுகின்றன.

வெகு அண்மையில் ஜோகூர், பத்து பகாட்டில் உள்ள டத்தோ பெந்தாரா லுவார் இடைநிலைப் பள்ளியில் இணைப்பாட நடவடிக்கைகளுக்கு, பதிவுகளுக்கு இன ரீதியில் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையைை ஏற்படுத்தியது.

அந்தப் பள்ளியின் மாலை நேர துணைத் தலைமையாசிரியரின் இந்த இனவாதப் போக்கு, அப்பள்ளியின் முதல்வருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. பள்ளி முதல்வரின் அனுமதி இன்றி எந்தவொரு சீற்றறிக்கையிலும் வெளியிடப்படமாட்டாது.

இவ்விவகாரம் கல்வி அமைச்சர் டத்தோ ரட்ஸி ஜிடின், ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் இப்ராஹிம் ஆகிய இருவரின் கவனத்திற்கு எட்டி சினமுற்றனர்.

ஜோகூர் மாநிலத்தில் உள்ள எந்தவொரு பள்ளியிலும் இந்த இன ஒதுக்கல் – பாகுபாடு இனியும் தலைதூக்கக்கூடாது என்று பட்டத்து இளவரசர் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

பள்ளி முதல்வர் அப்துல் ரசாக் ஹமிட் மன்னிப்புக் கேட்டிருந்தாலும் இந்நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் விரிசல் அவ்வளவு எளிதில் மறைந்து விடாது.

புதிய பொருளாதாரக் கொள்கை இனம், மதம், சமயம், நிறம் பாகுபாடு இன்றி அனைத்து ஏழைகளுக்கும் உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

ஆனால், அதுவே ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் சொகுசு வாழ்க்கைக்கு ஒரு பாஸ்போர்ட்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பணம் கொழிக்கும் வியாபாரங்கள் – வணிகங்களுக்கான லைசென்சுகள்  பெர்மிட்டுகளைப் பெறுவதற்கு அக்கொள்கை பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நோக்கத்திற்காக இக்கொள்கை வகுக்கப்படவில்லை. இன்றைய நிலையில் அது வேறு விதமாக கையாளப்படுவது இனங்களுக்கிடையிலான விரிசல் மோசமடைவதற்குக் காரணமாக இருக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின்னர் 1980ஆம் ஆண்டு வரை சுபிட்சமும் மகிழ்ச்சியும் சகிப்புத்தன்மையும் புரிந்துணர்வும் நிறைந்த சமுதாயங்களைப் பார்த்தோம். விட்டுக் கொடுத்தும் மரியாதை கொடுத்தும் மக்கள் வாழ்ந்தனர்.

இன்று அந்த நல்லெண்ணமும் ஒற்றுமையும் (முஹிபா) மறைந்து வருகின்றன. பரஸ்பர உணர்வுகள், மரியாதைகள் எங்கே என்று தேடும் அளவில் உள்ளன. மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை இல்லை; மதிப்பும் இல்லை. உணர்வுகளைக் காயப்படுத்தும் சம்பவங்கள்தான் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன.

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here